தூரின், ஜூலை 17-

உலகின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (வயது 33) இத்தாலியின் முன்னணி கால்பந்து அணியான ஜுவெண்டெஸ்சில் 100 மில்லியன் பவுன் தொகையில் இணைந்துள்ளார்.

2009ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகி, ஸ்பெய்னின் ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்தார். கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் அணிக்கான 451 கோல்களை அவர் அடித்துள்ளார். அதோடு உலகின் தலைசிறந்த கால்பந்து விளையாட்டாளர் என்ற விருதையும் அவர் 5 முறை வென்றுள்ளார்.

4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஜுவெண்டெஸ் அணியில் இணைந்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இப்போதையே மதிப்பு 300 மில்லியன் பவுன் தொகையாக உள்ளது. இந்நிலையில் அவர் 2020 யூரோ கிண்ணப் போட்டியிலும், 2022 உலகக் கிண்ணப் போட்டியிலும் போர்த்துகல் அணியில் இடம்பெறுவார் என்றும் இத்தாலி ஊடகங்கள் கூறுகின்றன.

ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகியது தமக்கு வருத்தம் அளிக்கவில்லை என கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். சவால்களை சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் ஜுவெண்டெஸ் அணியில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனது வயதில் உள்ள ஆட்டக்காரர்கள் சீனா கால்பந்து அணியில்தான் இணைவார்கள். ஆனால் என்னை இணைத்துக் கொள்ள ஜுவெண்டெஸ் விருப்பம் தெரிவித்தது, மகிழ்ச்சியான ஒன்று என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

ஜுவண்டெஸ் அணியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். பாதுக்காப்பான வலையத்திற்குள் தொடர்ந்து விளையாடுவதை நான் விரும்புவதில்லை. அதனால்தான் மன்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரியல் மாட்ரிடில் இணைந்தேன். இப்போது ஜுவண்டெஸ். அனைத்தும் சரியாக அமைந்தால், ஜுவண்டெஸ் அணியிலிருந்து உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் தாம் வெல்லலாம் என ரொனால்டோ கூறினார்.