கோலாலம்பூர், ஆக. 6 –

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு அட்டைகளில் புதிய அம்சங்களை இணைப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது என மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரொஹானி கரிம் தெரிவித்தார்.

கல்வி கற்பதில் பிரச்சனையை எதிர்நோக்கும்  மதி இறுக்கம் டிக்ஸ்லெஷியா போன்ற குறைபாடுகளினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான  சிறப்பு அட்டைகளில்  புதிய அம்சங்களை இணைப்பது குறித்து அரசாங்கம்  பரிசீலித்து வருவதாக அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில் மதி இறுக்கக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  இணையத்தின் வாயிலாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பெர்மாத்தா குர்னியா மையம் ஆராய்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளிக்குச் மாணவர்களோடு செல்வதைத் தவிர்க்க இணைய கல்வி திட்ட அமலாக்கம் குறித்து பரிசீலிக்கப்படுவதாகத்  தெரிவித்தார்.

சபா, சரவாக் மாநிலங்களில் பெர்மாத்தா குர்னியா மையத்தை அமைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அவ்விரு மாநிலங்களிலும் மதி இறுக்கக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி வசதியை ஏற்படுத்தித் தரும் முயற்சியாக அம்மையத்தை அமைக்கத்  திட்டமிடப்பட்டிருப்பதாக ரொஹானி தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவியும் பெர்மாத்தாவின் திட்டப் புரவலருமாகிய டத்தின்ஸ்ரீ ரொஸ்மா மன்சோரிடமும் இது தொடர்பிலான பரிந்துரை முன் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.