கோலாலம்பூர், ஆக 6 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்கு முழுமையான மனித மூலதன மேம்பாட்டை அடைய 4 முக்கிய கொள்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் முன்வைத்துள்ளார்.

நாட்டில் வேலைத் துறை மற்றும் தொழிற்துறை தேவைக்கு ஏற்ப மக்கள் கல்வித்  தகுதியையும் உயர் திறனையும் கொண்டிருப்பதை உறுதி செய்வது, உயர் திறனுக்கு ஏற்ப மக்களின் வருவாயை அதிகரிப்பது அதில் அடங்கும். முழுமையான மனிதமூலதன மேம்பாட்டை எட்ட, அரசாங்கம், நான்கு கொள்கைகளை வகுத்துள்ளது. நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு  முழுமையான மனித மூலதன மேம்பாடு அவசியம் என்பதால் அந்தக் கொள்கைகள் வகுத்துள்ளதாக நஜீப் தெரிவித்தார்.

வேலைச் சந்தையின் தேவைக்கு ஏற்ப  அதிகமான மக்கள்  கல்வியறிவையும் உயர்திறன் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும். மக்கள் அவர்களிடம் இருக்கும் திறனாற்றலை மேம்படுத்தி, வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.  நகர், புறநகர் ஏழை, பணக்காரர், இனம் ஆகிய பாரபட்சமின்றி அனைவரும் சமூக,  – பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள சரிசமமான வாய்ப்புகளை வழங்குவது, ரோபோட்டிக் தொழில்நுட்பம் உட்பட வருங்காலத்தில் மிக அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவுள்ள துறைகளில் மாணவர்கள்  திறன் பெற்றிருப்பது ஆகியவை அந்த நான்கு கொள்கைகளில் அடங்கும்.  எதிர்கால சவால்களையும் நடப்புச் சவால்களையும் கருத்தில் கொண்டு மனித மூலதன மேம்பாட்டை இப்போதிருந்தே வலுப்படுத்த வேண்டிய கட்டத்தில் அரசாங்கம் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்கென அரசாங்கம் அதிகமான நிதியை ஒதுக்குவதாக நஜீப் குறிப்பிட்டார்.

இவ்வேளையில்,   உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகங்கள் பட்டியலில் நாட்டில் உள்ள ஆராய்ச்சிப் பல்கலைகழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி கழகங்களும் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென நஜீப் வலியுறுத்தினார். வருங்கால தேவைக்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்க உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் இடம் பெற நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்விக் கூடங்களும் உறுதி செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.