கோலாலம்பூர், ஆக.6

தலைநகரில் நடைபெறவிருக்கும் 29 ஆவது சீ விளையாட்டு போட்டிக்கு அனைத்து மலேசியர்களும் தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டுமென்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று கேட்டுக்கொண்டார். நேற்று காலை சீ விளையாட்டு போட்டிக்கான தன்னுடைய தீபச் சுடர் ஓட்டத்தை நிறைவு செய்தபின் வெளியிட்ட செய்தியில் அவர் இதனை சொன்னார்.

ஒன்றாக எழுச்சி பெறுவோம் எனும் சுலோகத்தின் வாயிலாக சீ விளையாட்டு போட்டியை நாம் ஆதரிப்போம். சீ போட்டியில் பங்கேற்கும் மலேசிய விளையாட்டாளர்களுக்கும் அந்த போட்டிக்கும் ஆதரவு  தெரிவிக்க நமது நாடு எனும் உணர்வில் மக்கள் ஒன்றாக எழுச்சி பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான உறுதிமொழியை அவர் ‘உறுதி மொழி க்கான காரில் எழுதினார். நாசா குரூப் நிறுவனம் பிஜோட் 208 ரகத்தை சேர்ந்த அந்த காரை வழங்கியிருந்தது.

சீ விளையாட்டு போட்டிக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்த பொதுமக்கள் அந்த கார்மீது தங்களின் வாழ்த்துச் செய்திகளை எழுதலாம். பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் கீழ்தளத்தில் பெட்ரோனாஸ் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ வான் ஜூல்கிப்ளி வான்  அரிப்பிடமிருந்து தீபச் சுடரை காலை 9.00 மணிக்கு பெற்றுக்கொண்ட பிரதமர் பெர்சியாரான் கேல்சிசியில் உள்ள மெனரா நாசா வரையில் அந்த தீபச் சுடரை ஏந்திச் சென்றார். அவர் தம் துணைவியாருடன் இதில் கலந்துகொண்டார்.

மெனரா நாசா சென்றடைந்தவுடன் அவர் அந்த தீபச் சுடரை நாசா நிர்வாகத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ்.எம். நசாருடின் மற்றும் எஸ்.எம் நஜ்முடினிடம் வழங்கினார்.  கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், துணை அமைச்சர் டத்தோ சரவணன் உள்ளிட்ட 250 பேர் இதில் கலந்துகொண்டனர்.