கோலாலம்பூர், ஆக. 7-

வர்த்தகத்துறையில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்ததோடு சமுதாயச் சேவையிலும் ஈடுபட்டு வந்த மாபுப் உணவக உரிமையாளர் டத்தோ ஹாஜி சீனி அப்துல் காதருக்கு மேன்மை தங்கிய பஹாங் சுல்தான் டத்தோ விருது வழங்கி கௌரவித்தார்.

அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரது நண்பர்கள், உறவினர்கள் இணைந்து மாபெரும் நிகழ்ச்சியை நேற்று இரவு பங்சார் ஸ்போர்ட் செண்டரில் நடத்தினார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு டத்தோ ஹாஜி சீனி அப்துல் காதருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்ததோடு தங்களது அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.

மாலை 5.30க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி 10.00 மணிக்கு முடிவடைந்தது. தொடக்கமாக டத்தோ அப்துல் ஹக்கிம் வரவேற்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து பேசிய மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அயூப் கான், சமுதாயச் சேவையில் ஈடுபட்டு வரும் டத்தோ ஹாஜி சீனி அப்துல் காதருக்கு டத்தோ விருது வழங்கப்பட்டது இந்திய முஸ்லிம்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என தெரிவித்தார்.

குறிப்பாக வர்த்தகத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கும் இளைஞர்களுக்கு அவர் பலவழிகளில் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.அதோடு இயலாதவர்களுக்கு உதவி புரிவதையும், வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த செயல்பாட்டிற்காக இந்த டத்தோ விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று அயூப் கான் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜசிங்க மங்களம் தலைவர் ஹாஜி பாஷிர் அமாட், பாரிடாயா மதராச தலைவர் அலி பின் தைப்கான், எம்.எஸ்.கனி, எஸ்.ஐ.எம்.எஸ். தலைவர் ஹாஜி சாயிட் புகாரி, மலேசிய நிசால் ஜமாத் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் வாயிட், எஸ்.எம்.எஸ். டீன் குழுமத் தலைவர் ஷீராஜ், மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஹாஜி ஜமாருல் கான், தொழிலதிபர் ஜஹுபர் அலி, டத்தோ முகமட் மூசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.