குழந்தை பராமரிப்பில் கவன குறைவு; சட்டம் கடுமையாக்கப்படும் -டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா

0
9

கோலாலம்பூர், ஜூலை 21
குழந்தைப் பராமரிப்பாளர்களின் அலட்சியத்தால் பெரும்பால குழந்தைகள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அச்சம்பவங்களை தடுக்க சட்டம் கடுமையாக்கப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தற்போது நடப்பில் உள்ள சட்டம் மற்றும் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதால் இவ்விவகாரம் குறித்து சட்டத்துறைத் தலைவருடன் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

முன்னதாக குழந்தைப் பராமரிப்பாளரின் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த 10 மாத ஆண் குழந்தை சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தது.

பத்து கேவ்ஸ் கம்போங் நகோடாவில் குழந்தை பராமரிப்பவர்களிடம் இருந்த அடாம் ரேய்கால் எனும் 5 மாத குழந்தை குளிர்பதன பெட்டிக்குள் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவங்கள் நிகழ்ந்ததைப் பற்றிக் கேள்வியுறும் போது வேதனையாக உள்ளது. தற்போது இவ்விவகாரம் தொடர்பில் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் விவரங்களைத் திரட்டிக் கொண்டிருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் வான் அசிஸா குறிப்பிட்டார்.