சென்னை, ஜூலை 22-

`மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகருக்காக ஐஏஆர்ஏ என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள் தளபதியின் ரசிகர்கள்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 100ஆவது படம் `மெர்சல்’ திரைப்படத்தை தயாரித்தது. இளம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியீடு கண்டது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வசூலை வாரி குவித்தது. மலேசியாவிலும் பாகுபலி 2க்கு இணையான வசூலை பெற்றது.

இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் நடிகர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. விருது கிடைக்குமா என்பது உறுதியில்லை என்றாலும், விஜய்க்கு நடிக்க வராது என ஆரம்ப காலத்தில் கிண்டல் செய்தவர்கள் கூட இப்போது அவரின் வளர்ச்சியை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

#Mersal #thalapathy #vijay