மகளிர் சமூகநல மேம்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் அழகு ராணி போட்டி!

கோலாலம்பூர், ஜூலை 24-

பிரிக்பீல்ட்ஸில் அழகுக் கலை நிறுவனத்துடன் இணைந்து மகளிர் சமூகநல மேம்பாட்டு இயக்கம் அழகு ராணி போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாக ஓமனா மயில் வாகனன் தெரிவித்தார். ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸில் நடக்கும் இறுதிப் போட்டிக்கு 12 பேர் தகுதி பெற்றிருப்பதாக அவர் கூறினார். முன்னதாக மகளிர் சமூகநல மேம்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் தனித்து வாழும் 20 தாய்மார்களுக்கு இலவச அழகுக் கலை பயிற்சி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் பங்கெடுத்த தனித்து வாழும் தாய்மார்களுக்கு அழகு ராணி போட்டியின் போது சான்றிதழ் வழங்கப்படும். அதோடு, இதிலிருந்து திரட்டப்படும் நிதியின் மூலம் அவர்களுக்கு ஒப்பனை சாதனங்களும் வாங்கித் தரப்படும் என அவர் தெரிவித்தார்.

தனித்து வாழும் தாய்மார்கள் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். கைத்தொழிலை கற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களால் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும். அந்த அடிப்படையில் இலவச பயிற்சி வழங்கப்பட்டதாக ஓமனா கூறினார்.

இதில் 20 பேர் பங்கு கொண்டு அழகுக் கலை குறித்து முழுமையான பயிற்சி பெற்றார்கள். 35 நாட்கள் நடந்த இப்பயிற்சியின் மூலம் அழகுக் கலைக்கு தேவையான அடிப்படை விஷயங்களை அவர்கள் முழுமையாக அறிந்து கொண்டார்கள்.

வரும் காலங்களில் இதை ஒரு சொந்த தொழிலாகச் செய்யவும் அவர்களால் முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் அழகு ராணி போட்டியையும் நாம் ஏற்பாடு செய்தோம். நாடு தழுவிய நிலையிலிருந்து பலர் இதில் கலந்து கொண்டார்கள். இறுதியாக 12 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

இப்போட்டியின் வெற்றியாளருக்கு 1,000 வெள்ளி ரொக்கம் வழங்கப்படும். 2ஆம் நிலை வெற்றியாளருக்கு 700.00 வெள்ளியும், 3ஆம் நிலை வெற்றியாளருக்கும் 500.00 வெள்ளியும் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என ஓமனா கூறினார்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இலவச ரத்த பரிசோதனையும், இலவச உணவும் அனைவருக்கும் வழங்கப்படும் என ஓமனா கூறினார். இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உதவிய அனைவருக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.