லண்டன், ஜூலை.24 – 

செல்சியின் மத்திய திடல் ஆட்டக்காரர்கள் எடின் ஹசார்ட், விலியன் மற்றும் கோல் காவலர் தீபாட் கோர்த்துவா அக்கிளப்பில் தொடர்ந்து நீடிப்பார்கள் என புதிய நிர்வாகி மவ்ரிசியோ சாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் பங்கேற்ற ஹசார்ட்டும், கோர்த்துவாவும் தற்போது விடுமுறையில் இருக்கின்றனர்.

அந்த இரண்டு ஆட்டக்காரர்களும் பயிற்சிக்கு திரும்பியப் பின்னர் அவர்களின் எதிர்காலம் முடிவு செய்யப்படும் என சாரி தெரிவித்துள்ளார். அந்த ஆட்டக்காரர்களிடம் நேரடியாக பேசியப் பின்னர் நிச்சயம் அவர்கள் செல்சியில் நீடிப்பதை தம்மால் உறுதிச் செய்ய முடியும் என்று சாரி கூறினார்.

எடின் ஹசார்ட், தீபோட் கோர்த்துவாவை வாங்க ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் தீவிரம் காட்டி வருவதாக பிரிட்டன் ஊடகங்கள் கூறுகின்றன. அதேவேளையில் பார்சிலோனா, விலியனுக்கு வலை வீசி வருகிறது. விலியனுக்காக பார்சிலோனா வழங்கிய ஐந்து கோடி ஈரோ டாலர் அழைப்புத் தொகையை , செல்சி நிராகரித்துள்ளது.

விலியனுடன் நாள்தோறும் பேசி வருவதாக குறிப்பிட்ட சாரி, நிச்சயம் அவர் செல்சியில் நீடிப்பார் என தெரிவித்துள்ளார். செல்சி நிர்வாகியாக மவ்ரிசியோ சாரி பொறுப்பேற்றப்  பின்னர் பிரேசில் ஜார்கின்ஹோ மட்டுமே அந்த கிளப்பில் இணைந்துள்ளார்.