மேன்மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு அதிக அதிகாரம் ஏன்? கைரி ஜமாலுடின் கேள்வி

கோலாலம்பூர், ஜூலை 24-

அரசு அமைத்துள்ள மேன்மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு(சிஇபி) அளவுக்கு மீறிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது ஏன என கைரி ஜமாலுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆலோசனை மன்றமானது யாரையும் அழைத்து கேள்வி எழுப்பமுடியுமா என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய கைரி, சிஇபி தலைவர் டான்ஸ்ரீ டாயிம் ஸைனுடின், நாட்டின் உயர் நீதிபதிகளை அழைத்து பணிவிலகுமாறு உத்தரவிட்ட சம்பவம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அது ஒரு ஆலோசனை அல்ல, உத்தரவு. அத்தனையும் பதிவாகியுள்ளது என்றார்.

சிஇபி-இன் இன்னொரு உறுப்பினரான டான்ஸ்ரீ ஸெட்டி அக்தார் அஸிஸ், அரசுத் தொடர்புடைய பெர்பாடானான் நேசனல் பெர்ஹாட் (பிஎன்பி), சைம் டார்பி புரொபர்டிஸ்- ஆகியவற்றின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அவருக்கு மறுமொழி கூறிய பிரதமர் துறை அமைச்சர் லியு வூய் கியோங். சிஇபி ஒரு ஆலோசகர் மன்றம்தான் என்பதை வலியுறுத்தினார். இதற்கு முன்பே 1எம்டிபி மீது கூட பல ஆலோசனைக் குழுக்களை அமைத்திருக்கிறோம். ஆலோசனை கூறுவதுதான் அவற்றின் பணி. அதற்கு அது யாருக்கும் காரணம் கூற வேண்டும் என்பதில்லை.

அவர்களின் ஆலோசனைகள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது. அரசாங்கம் அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டுக் கொள்ளுமே தவிர, இறுதி முடிவுகளை அரசுதான் எடுக்கும்.  அந்த விளக்கத்தால் மனநிறைவடையாத கைரி, கடந்த வாரம் டாயிம் சீனா சென்று சீன ஆரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து வினவினார்.

அதுவும் ஆலோசகர் பணிதானா, ஆலோசனை சொல்லத்தான் சென்றாரா என கைரி கேட்டார்.
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பணித்ததால், டாயிம் சீனா சென்றதாக லியு தெரிவித்தார்.
மேலும் அவர், ஹராப்பானின் 100 நாள் ஆட்சிக்குப் பிறகு அம்மன்றம் கலைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.