காஜாங், ஜூலை 24-
கொலையுண்ட நபரின் உடலிலிருந்து உறுப்புகள் களவாடப்பட்டதாக பரவிய செய்தியை போலீஸ் மறுத்துள்ளது. இது வதந்தி என அது குறிப்பிட்டது.

14ஆவது மைல், உலு லங்காட்டில் ஜாலான் கோல கெலாவாங் சாலையோரம் ஒரு நபர் வெட்டுக் காயத்துடன் இறந்துக் கிடந்தார்.

கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கைச் சேர்ந்த 20 வயதான அந்நபர் இறந்து கிடந்ததை காலை 7.00 மணியளவில் பொதுமக்கள் பார்த்தனர் என்று காஜாங் போலீஸ் தலைவர், ஏசிபி அகமது ஜபிர் முகமது யூசோப் தெரிவித்தார்.

இரத்தம் கசிந்த நிலையில் அந்நபர் சாலையோரம் கிடந்தார். உடலிலும் தலையிலும் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன. கட்டடங்களில் புகுந்து திருடுவது போன்ற குற்றப் பதிவுகள் இவர் மீது உள்ளன.

அவர் கொலையுண்ட இடத்தில் மோட்டார் சைக்கிளும் இருந்தது. இது அவருக்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

இதற்கிடையே, இச்சம்பவம் உடலுறுப்பு களவாடப்பட்டதால் நடந்தது என சமூக வலைத் தளங்கள்ல் செய்தி பரவியது. அதில் உண்மையில்லை. இது ஒரு கொலைச் சம்பவம் என்று ஏசிபி ஜாபிர் கூறினார்.