சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களுக்கு வர்த்தக பயிற்சி பட்டறை!

0
6

பெட்டாலிங் ஜெயா, ஆக. 7- 
சி.ஜி.சி. என்றழைக்கப்படும் மலேசிய கடன் உத்திரவாத கழகம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் உள்ளூர் சந்தைகளில் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஒரு நாள் பட்டறையை ஏற்பாடு செய்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் மேம்பாட்டை திட்டமிடக்கூடிய நிதி நிறுவன மையம் என்ற அடிப்படையில் சி.ஜி.சி. கழகம் நாடு தழுவிய நிலையில் இந்த பட்டறையை நடத்த தயாராக உள்ளது.
சம்பந்தப்பட்ட தொழில்துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவர்கள் தங்களது வர்த்தகத்தை மேலும் ஆதாயங்கள் நிறைந்த தொழில்துறையாக உயர்த்துவது தொடர்பில் இந்த பட்டறையில் பல்வேறு ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி பட்டறை வருகின்ற 10ஆம் தேதி பேராக், ஈப்போவிலுள்ள எம் ரூஃப் தங்கும்விடுதியில் நடைபெறவுள்ளது. உணவு மற்றும் நீர் தொழில்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்காக இந்தப் பயிற்சி பட்டறை நடத்தப்படுகின்றது. முற்றிலும் இலவசமாக இந்தப் பட்டறை நடத்தப்பட்டாலும் குறிப்பிட்ட இடங்களே எஞ்சியுள்ளதாக அதன் வர்த்தக தலைமை நிர்வாகி லியோங் வெங் சூங் தெரிவித்தார்.

உள்ளூர் சந்தைகளில் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள் எதிர்நோக்கிவரும் சவால்களை நாங்கள் அறிந்துள்ளோம். ஆதாயங்களைப் பெருக்கும் வகையில் சந்தைகளில் அவர்களுக்கு உள்ள வர்த்தக வாய்ப்புகள் குறித்து விளக்கும் நோக்கில் இந்த பட்டறையை ஏற்பாடு செய்துள்ளோம்.

முற்றிலும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்காக இந்த பட்டறையை நாங்கள் நடத்துகின்றோம். மலேசியாவிலுள்ள பேரங்காடிகள், மளிகைக் கடைகளில் உணவு தொழில்துறைகளின் பொருட்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சவால்கள், ஹாலால் சான்றிதழ் பெறுதல், சிறந்த உற்பத்தி முறை முதலானவை குறித்து பல்வேறு தலைப்புகளில் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது.

இதில் மலேசிய மைடின் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நொர்மான் ராஜன் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்பாளர்களுக்கு விளக்கம் அளிக்கவுள்ளதாக லியோங் வெங் சூங் குறிப்பிட்டார்.

மேல் விவரங்களுக்கு புனிதா ஜெயபாலன் (052433900) அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் வாயிலாகவும் ஃபாரிஸ் ஷுக்கோர் (o3-7806 2300) அல்லது [email protected] மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.