அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > பி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்!!!
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்!!!

கோலாலம்பூர், ஆக. 1-

பக்தி சக்தி இயக்கம் மலேசியாவில் உள்ள பி 40 எனப்படும் குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இலவச வகுப்புகளை நடத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்த செயல் திட்டத்தை நாடு முழுவதும் வழிநடத்த செடிக் அமைப்பு 30 லட்சம் வெள்ளியை வழங்கியிருந்தது.

நாடு தழுவிய நிலையில் 32 மையங்களில் 1,500 மாணவர்கள் இலவச பிரத்தியேக வகுப்பில் கலந்துக் கொள்வதற்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தி சக்தி இயக்கம் நாடு தழுவிய நிலையில் 48 மையங்களை உருவாக்கியது. இதில் 2940 மாணவர்கள் இலவசமாக கல்வி பயில்கின்றார்கள். 41 விழுக்காடு ஆண்களும், 59 விழுக்காடு பெண் மாணவர்களும் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெறுகிறார்கள்.

இதில் 89 விழுக்காடு மாணவர்கள் பி 40 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 7 விழுக்காடு எம்.40 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் இதர மாணவர்கள் மேல் வர்கத்தைச் சேர்ந்தவர்கள் என பக்தி சக்தி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஜெ.பழனியப்பன் கூறினார்.

இந்த 89 விழுக்காடு பி.40 பிரிவின் கீழ் உள்ள இந்திய மாணவர்களின் குடும்ப பின்னணியில் ஆராய்ந்து பார்த்ததில் 26 விழுக்காடு பேர் 1,000 வெள்ளி முதல் 1,500 வெள்ளி வரை மாத வருமானம் பெறுகிறார்கள். 23 விழுக்காடு பேர் 1,500 வெள்ளி முதல் 2,000 வெள்ளி வரை மாதம் வருமானமாக பெருகிறார்கள். 16 விழுக்காடு பெற்றோர்கள் 2,000 முதல் 2,500 வரையிலும், 9 விழுக்காடு பெற்றோர்கள் 3,000 முதல் 3,500 வரை வருமானம் பெருகிறார்கள்.

இதில் 12 விழுக்காடு பெற்றோர்களின் மாத வருமானம் 500 வெள்ளி முதல் 1,000 வெள்ளிக்குள் இருப்பதுதான் மிகவும் வருத்தமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். பக்தி சக்தியின் வகுப்புகளுக்கு பி.40இன் கீழ் உள்ள மாணவர்கள் வருவதால் அவர்கள் கல்வியின் மீது கவனம் செலுத்த தொடங்குகிறார்கள். இந்த வகுப்புகளில் கலந்துகொள்பவர்கள் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள் எனக் கூற முடியாது. ஆனால் கல்வியில் பின் தங்கியவர்களை தேர்ச்சி பெறக்கூடிய அடைவு நிலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாக இருந்தது அதில் வெற்றியும் கண்டுள்ளோம் என டத்தோ பழனியப்பன் தெரிவித்தார்.

இந்த மாணவர்களின் பின்புலன்களை ஆராயும் போதுதான் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்னை குறித்து தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களுல் ஒளிந்துள்ளது. அதனால் தரமிக்க ஆசிரியர்கள் கொண்டு 26 வாரங்கள் இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்றோம். மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு என 5 பாடங்கள் இலவசமாக போதிக்கப்படுகின்றது. அதோடு ஒவ்வொரு வாரமும் இந்த 5 பாடத்திற்கான மாதிரி தாட்களையும் அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.

இது அவர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்குகிறது. இதன் மூலம் படிக்கவேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு அதிகமாகின்றது. பக்தி சக்தி இயக்கத்தின் இத்திட்டத்திற்கு 33 லட்சம் வெள்ளி மானியமாக வழங்கப்பட்டாலும் இதன் மூலம் பல பேர் பலனடைந்துள்ளார்கள். குறிப்பாக ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்றோம். சிறு மற்றும் நடுத்தர உணவக தயாரிப்பாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளையும் வழங்கியுள்ளோம்.

குறிப்பாக பிள்ளைகளுக்கு கூடுதல் வகுப்புகளை வழங்க வேண்டும் என்ற இந்திய பெற்றோர்களின் செலவினங்களை குறைத்திருக்கின்றோம். இக்காலச் சூழ்நிலையில் 5 பாடங்களுக்கு கூடுதல் வகுப்பு என்றால் குறைந்தது 250 வெள்ளி செலவிடவேண்டும். ஆனால் பக்தி சக்தி இந்த வகுப்புகளை இலவசமாக நடத்துகிறது என்பதையும் டத்தோ பழனியப்பன் நினைவுறுத்தினார்.

இந்த திட்டத்தை அடுத்தாண்டும் தொடரவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். அரசாங்கத்திடம் தொடர்ந்து மானியத்தை எதிர்பார்ப்பது ஒரு புறம் இருந்தாலும் சமுதாயத்திற்காக உதவ வேண்டும் என எண்ணம் கொண்டவர்கள் தாராளமாக எங்களுக்கு உதவலாம். ஒரு மையத்தின் செலவை ஒரு நிறுவனம் ஏற்றுக் கொண்டால் 2,000க்கும் அதிகமான பி.40 பிரிவின் கீழ் உள்ள இந்திய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என டத்தோ பழனியப்பன் நம்பிக்கை தெரிவித்தார்.

One thought on “பி 40 பிரிவின் இந்திய மாணவர்களின் கல்விக்கு வித்திட்ட பக்தி சக்தி இயக்கம்!!!

  1. Pushpalata

    மாணவர்களின் அடைவு நிலை ஓப்பீடும் தேவை….
    வகுப்புக்கு முன், வகுப்பில் கலந்துகொண்ட ப்பின். அடைவு நிலை பள்ளி அடைவு நிலையாகும்… அரை ஆண்டு, ஆண்டு இறுதி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன