கோலாலம்பூர், ஆக. 3
கேபிஎன் கிக்ஸ் இன் பிஸ்னஸ் நெட்வொர்க் அமைப்பு நம்பிக்கை கூட்டணியின் ஹராப்பான் நிதிக்கு கணிசமான தொகையை வழங்கவிருப்பதாக அதன் தலைவர் ராசேந்திரன் ராசையா கூறினார். அதோடு நம்பிக்கை கூட்டணியின் இந்திய தலைவர்களுக்கு சிறப்பு செய்யப்படுமென அவர் கூறினார். மலேசிய இந்தியர்களின் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

உலக அளவில் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டுமென்பதற்காக இதில் வெளிநாட்டு தொழில் முனைவர்களும் இடம்பெற்றுள்ளார்கள். உலகளாவிய இந்த அமைப்பின் சிங்கப்பூர் தலைவராக பி. திருநாள் கரசு, அமெரிக்காவின் தலைவராக குமராசாமி செல்வம், இங்கிலாந்து தலைவராக திருநாவுகரசு குழந்தைசாமி, பிரான்ஸ் தலைவராக மணிக்குமார், லக்சம்பெர்க் தலைவராக கார்த்திக் பழனியப்பன், இந்தியாவை பிரதிநிதித்து செந்தில் குமார், டாக்டர் அருண், பேராசிரியர் செந்துராமலிங்கம் ஆகியோருடன் தென் ஆப்பிரிக்கா பொறுப்பாளராக சிவராஜா தேவராஜன், ஆஸ்திரேலியா தலைவராக மோகன்ராஜ், கனடா தலைவராக கோபால் ஆறுமுகம், சீனா தலைவராக மோகன்ராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளார்கள்.

2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு நாளை ஆகஸ்ட் 5ஆம் தேதி சிலாங்கூர் ரோயல் கிளப்பில் நம்பிக்கை கூட்டணியின் ஹராப்பான் நிதிக்கு நன்கொடை வழங்கவிருக்கின்றது. ஒரு கணிசமான தொகையை வழங்கவும் இந்த அமைப்பு முன்வந்திருப்பதாக ராசேந்திரன் கூறினார்.

மலேசியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தின் மேம்பாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் நிதி வழங்குவது என்றாலும், நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தலைவர்களுக்கு சிறப்பு செய்யும் அங்கமும் இதில் இடம்பெறுகின்றது.

இந்த நிகழ்ச்சியில் தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங், இயற்கை வளம் நீர் வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ், செபராங் பிறை நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், கஸ்தூரி பட்டு, செனட்டர் சந்திர மோகன், சண்முகநாதன், குணராஜ், காமாட்சி உட்பட பலர் கலந்து கொள்வதாகவும் ராசேந்திரன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கேபிஎன் அமைப்பை சேர்ந்த 200 பேர் உட்பட இந்தியாவிலிருந்து 15 தொழில் முனைவர்களும் கலந்து கொள்வாரென அவர் தெரிவித்தார்.