வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > உலுசிலாங்கூர் தொகுதியில் அன்வார் போட்டி?
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

உலுசிலாங்கூர் தொகுதியில் அன்வார் போட்டி?

கோலாலம்பூர், ஆக. 4-

துன் டாக்டர் மகாதீரை அடுத்து நாட்டின் 8ஆவது பிரதமராக உறுதிமொழி எடுத்துக் கொள்ள போவது டத்தோஶ்ரீ அன்வஐ இப்ராஹிம்தான் என பரவலாகப் பேசப்படுகின்றது. அதனை முன்னெடுக்கும் வகையில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி கலைக்கப்பட்டு அதில் அவர் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த ஏற்பாட்டின் மூலம் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் புதல்வி நூருல் இஸ்ஸா அன்வாரும் முறையே தங்களது தொகுதிகளான பாண்டான் மற்றும் பெர்மாத்தாங் பாவ் ஆகிய தொகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர், தமது கணவர் போட்டியிடுவதற்காக வான் அஸிஸா தமது பாண்டான் தொகுதியை விட்டுக் கொடுப்பார் என்றும் பேசப்பட்டது. மேலும் அவரின் புதல்வி நூருல் இஸ்ஸா அன்வார் தமது பெர்மாத்தாங் பாவ் தொகுதியை அவருக்காக விட்டுக் கொடுப்பார் என்ற ஆரூடமும் சொல்லப்பட்டது. எனினும் அந்தக் கூற்றை நூருல் இஸ்ஸா மறுத்துள்ளார்.

சுங்கை கண்டீஸ் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அன்வர், இந்த இடைத்தேர்தல் முக்கியமில்லை என்றும் பிகே ஆரின் அமிருடின் ஷாரி ஏற்கனவே சிலாங்கூரின் மந்திரி பெசாராக இருக்கின்றார் என்றும், தாம் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப மேலும் ஒரு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தாம் எந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இன்னும் ஈராண்டுகளில் தாம் பிரதமர் பொறுப்பை அன்வாரிடம் ஒப்படைக்கப் போவதாக துன் டாக்டர் மகாதீர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

பிகேஆர், ஜசெக, அமானா மற்றும் பிரிபூமி பெர்சத்து ஆகிய கட்சிகள் இணைந்த கூட்டணி மே 9இல் நடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் வென்றதன் மூலம் 60 ஆண்டுகளாக மலேசியாவை ஆட்சி புரிந்து வந்த தேசிய முன்னணியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அத்தேர்தலில், உலு சிலாங்கூர் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ பி.கமலநாதன் அத்தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆரின் லியோவ் ஹிசியாட் ஹுய் 13,391 வாக்குப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன