அண்மையச் செய்திகள்
முகப்பு > இலக்கியம் > தமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்! டத்தோஸ்ரீ தெய்வீகன்
இலக்கியம்சமூகம்முதன்மைச் செய்திகள்

தமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைகள்! டத்தோஸ்ரீ தெய்வீகன்

கோலாலம்பூர், ஆக. 5-

தமிழ் இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனை மேலோங்கியுள்ளது. அதை கற்றாலே அனைத்திலும் நமது சமுதாயம் மேம்படும் என பினாங்கு மாநில காவல் துறை ஆணையர் டத்தோஸ்ரீ தெய்வீகன் வலியுறுத்தினார். நமது முன்னோர்கள் சங்க இலக்கியங்களில் உயர்நிலைச் சிந்தனைக் கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர். அதற்கு திருக்குறள் மிகச் சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக் காட்டினார்.

கு.நாராயணசாமி எழுதிய கல்வியும் சிந்தனையும் எனும் நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிடு செய்து தலைமையுரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார். தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்கள் போதிக்கும் நற்பண்புகள்தான் இன்றளவும் மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதே போல் நமது இலக்கியங்களும் உயர்நிலைச் சிந்தனைகள், கணிமச் சிந்தனைகள் போன்றவற்றை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

ஆனால், அதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் நம்மிடையே பலருக்கு இல்லை. வள்ளுவன் கூறியதைப் போல ‘கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக எனும் ஒரு குரலே உயர்நிலை சிந்தனையை நம்மிடையே விதைக்கின்றது. கற்பது மட்டும் அறிவல்ல. அதை தாண்டி அதை வாழ்க்கையில் செயல்படுத்தக்கூடிய ஆற்றலை தருவதுதான் கல்வியின் சாரம்சமாகும்.

இன்று கல்வி கற்றால் போதும் என்ற நிலை மாறிவிட்டது. ஆக்ககரமான உயர்நிலைச் சிந்தனையாற்றல் மாணவர்களுக்கு போதிக்கப்படுகின்றது. இதை உணர்த்தும் ஆங்கில மலாய் நூல்களை நான் படித்துள்ளேன். தமிழில் இதற்கு தனி நூல் இல்லை. இப்போது கு.நாராயணசாமி எழுதிய கல்வியும் சிந்தனையும் எனும் நூல் நிச்சயம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வியும் சிந்தனையும் எனும் நூலை புரட்டிப் பார்த்தபோது நமது சங்க இலக்கியத்தில் ஒளிந்திருக்கும் உயர்நிலைச் சிந்தனைகளை அறிந்து கொள்ள முடிந்தது. நமது சங்க இலக்கியங்களை படிப்பது மட்டும் போதாது. அதன் கருத்துக்களை ஆழமாக மனதில் பதிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ தெய்வீகன் வலியுறுத்தினார். அதோடு, சிந்தனையும் கல்வியும் எனும் நூலை 2,000 வெள்ளி கொடுத்து பெற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இந்நூலில் ‘ஐ திங்க் எனப்படும் உயர்நிலைச் சிந்தனை, நரம்பியல்சார் கல்வியியல் போன்ற புதிய தலைப்புக்களும் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, கல்வியில் கவனம் செலுத்தத் தவறும் மாணவர்களை கையாள நரம்பியல்சார் கல்வியியல் தொடர்பாகவும் இதில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

அதோடு, 21ஆம் நூற்றாண்டு கல்வியலுக்கு ஆக்கப்படுத்தும் பயிற்றியல் கூறுகளையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. இந்த நூல் ஆசிரியர்களுக்கு பெரும் துணையாக இருக்கும். மேலும், இதை பெற்றோர்கள் வாங்கிப் படித்தால் பிள்ளைகளை எவ்வாறு கல்வியில் ஈடுபடுத்த முடியும் என்ற அடிப்படைக் கூறுகளையும் அறிந்து கொள்வார்கள் என நாராயணசாமி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மயில் மாத இத தோற்றுநர் டத்தோ சோதிநாதன், டத்தோ பழனியப்பன் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன