அன்வாரின் குரல் பதிவும் குடும்ப விரிசலும்

(மதியழகன் முனியாண்டி)

1. இது நீண்ட கட்டுரையும் அல்ல. ஆழமான கட்டுரையும் அல்ல. இது நீண்ட ஆழமாக எழுத வேண்டிய கட்டுரை. ஆனால் நேரம் இன்மையால் மிக சுருக்கமாக சில முக்கிய குறிப்புகளை மட்டும் இந்த கட்டுரையில் விவரித்துவிட்டு போய் விடுகிறேன். பிறகு நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுத முயல்கிறேன்.

2. அன்வார் குரலில் அவர் பேசியது போலவே மூன்று குரல் பதிவுகள்(Voice Note) இரண்டு நாட்களாக வாட்சாப் புலனத்தில் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து மீடியாக்களும் இது குறித்து கேள்விகள் எழுப்பி உள்ளார்கள். வலைபதிவாளர் ராஜ பெட்ரா தன் அகப்பக்கத்தில் இந்த குரல் பதிவுகளை இணைத்து ஒரு வீடியோ செய்து உள்ளார்.

3. ‘அஸ்மின் அலி மகாதீரின் கைப்பாவை(Barua) ஆகிவிட்டார். அதனால் அஸ்மின் அலியை எதிர்த்து ரபிசியை போட்டி போட சொன்னேன்’ என்று முதல் குரல் பதிவில் அன்வார் குரலில் பேசப்படுகிறது.

4. இரண்டாவது குரல் பதிவில் ‘முன்பு என்னை ஓரின சேர்கையில் குற்றஞ்சாட்டினார். மகாதீரின் 30 பில்லியன் ஃபோரக்ஸ் இழப்பு என்ன ஆனது?’ என்று அன்வார் கேட்பது போல் உள்ளது.

5. ‘மகாதீர் தன்னை கசானா தலைவராக நியமித்துக் கொண்டார். என்ன இது? கசானாவையும் காலியாக்க பார்க்கிறாரா?’ என்று மூன்றாவது குரல் பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

6. இந்த மூன்று குரல் பதிவும் வெவ்வேறு பின்னணி ஒலிகளைக் கொண்டிருக்கிறது. முதல் குரல் பதிவில் அன்வார் குரலில் பேசும் போது எந்த வித சத்தமும் இல்லை. இரண்டாவது குரல் பதிவின் பின்னணியில் சில குரல்கள் கேட்கிறது. மூன்றாவது குரல் பதிவின் பின்னணியில் மெல்லிய இசை சத்தம் கேட்கிறது. இது ஒரு தொடர்ச்சியான உரையாடல். ஆனால் வெவ்வேறு டப்பிங் சூழலைக் கொடுக்கிறது.

7. அடுத்தது, இது எழுதி படிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்(Script) போல உள்ளது. சரளமாக பேசும் ஒரு உரையாடலாக இல்லை. இந்த குரல் பதிவு தடவியல் துறைக்கு(Forensic) போனால், இது ஒரு போலியான டப்பிங் குரல் பதிவு என்பதனை மிக எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.

8. சினிமாவில் டப்பிங் ரிக்கார்ட்டிங்கில் உள்ளவர்களுக்கு சில டெக்னிக்கல் விசயம் தெரியும். இது போன்ற தொடர்ச்சியான உரையாடலை வெட்டும்(Edit) போது, வார்த்தைகளுக்கு நடுவில் போதுமான இடைவெளி(Space) இருக்க வேண்டும். சரளமாக பேசும் ஆடியோக்களில் இந்த இடைவெளி இருக்காது. ஆனால் அன்வாரின் குரல் போதுமான இடைவெளிகளைக் கொண்டுள்ளது. இந்த குரல் பதிவுகள் டப்பிங் செய்யப்பட்ட இமிடேஷன் போல் உள்ளது.

9. இது அன்வார் குரலா? இல்லையா? என்கிற வாதத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு இதன் பின்னணியில் இருக்கும் அரசியலை கொஞ்சம் தொட்டு பார்போம்.

10. இது அன்வார் குரல் இல்லையென்றால், அன்வார் போலவே பேசி டப்பிங் செய்து ஏன் வைரலாக்க வேண்டும்? இதனால் யாருக்கு என்ன லாபம்?

11. இந்த குரல் பதிவுகளில் இரண்டு முக்கிய கருத்துக்கள் பதிந்துள்ளது. ஒன்று; அஸ்மின் அலி மீது நம்பிக்கை துரோக குற்றம் சுமத்தப்பட வேண்டும். அன்வாருக்கும் அஸ்மின் அலிக்கும் பகை இருப்பது போல் ஒரு வெளி தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மற்றொன்று மகாதீருக்கும் அன்வாருக்கும் நடுவில் பனிப்போர் நடந்து வருவது போல் சித்தரிக்க வேண்டும்.

12. இந்த இரண்டு தோற்றத்தை ஏற்படுத்துவதால் யாருக்கு என்ன லாபாம்? ஆனால் நிச்சயமாக அன்வாருக்கு எந்த லாபமும் கிடையாது. அன்வாருக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைத்து விட்டது. பொறுத்திருந்தால் அடுத்த பிரதமராக அன்வார் கண்டிப்பாக ஒரு தவணையாவது பிரதமராக பதவி வகிப்பார். தன் மனைவிக்கு துணை பிரதமர் பதவியும் கிடைத்து விட்டது. தன்னுடைய கெஅடிலான் கட்சியையும் ஆளும் கூட்டணியில் பலமாக பதித்து விட்டார்.

13. இனி அன்வாருக்கு என்ன வேண்டும்? அப்படி என்றால் இந்த குரல் பதிவினால் யாருக்கு ஆதாயம்? இந்த குரல் பதிவு கெஅடிலான் கட்சியின் பொது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அன்வார், அஸ்மின் அலி இல்லாத முன்றாவது மனிதரின் ஆதாயத்துக்காக இந்த குரல் பதிவுகள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

14. அன்வார், அஸ்மின் அலிக்கு அடுத்து கட்சியில் முக்கிய தலைவராக கருதப்படுபவர் ரபிசி ரம்லி. இந்த குரல் பதிவுகள் ரபிசிக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ளது. வழக்கு காரணமாக ரபிசியால் நாட்டின் பொது தேர்தலில் போட்டியிட முடியாமல் போய் விட்டது.

15. கடந்த பொது தேர்தலில் துன் மகாதீரின் செல்வாக்கு 2 விழுகாடு மட்டுமே என்றும்; துன் மகாதீர் கல்வி அமைச்சராக தன்னை நியமித்துக் கொண்ட போது, பிரதமராக இருப்பவர்கள் அமைச்சு பதவிகள் எதனையும் ஏற்க கூடாது என்கிற பக்காத்தான் தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்தி சர்ச்சையை கிளப்பினார்.

16. பல சர்ச்சைகளை கிளப்பினாலும் ரபிசியால் தொடர்ந்து முன் வரிசைக்கு வர முடியவில்லை. தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டார். மூன்றாவது கட்ட அமைச்சரவை அமைந்த போது தனக்கு செனட்டர் கொடுக்கப்பட்டு அமைச்சர் பதவி கிடைக்கும் என பெரிதும் எதிர்ப்பார்த்தார். கிடைக்கவில்லை. அரசாங்க நியமன பதவிகள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

17. அவர் எதிர்ப்பார்த்த எதுவும் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. எல்லோராலும் மறக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில்தான் கெஅடிலான் கட்சியின் துணை தலைவருக்கு போட்டியிட போவதாக முந்திக் கொண்டு அறிவித்தார். தற்போது கெஅடிலான் கட்சியின் துணை தலைவராக இருப்பவர் அஸ்மின் அலி. ரபிசி களத்தில் குதித்திருப்பது அஸ்மின் அலிக்கு எதிராக.

18. ரபிசி அஸ்மின் அலியை தோற்கடிக்க வேண்டும். துன் மகாதீர், அஸ்மின் அலி இருவருக்கும் எதிராக பரபரப்பை கிளப்பியிருக்கும் அன்வாரின் குரல் பதிவு ரபிசிக்கு ஆதரவாகவே உள்ளது. இதன் உள்நோக்கம் கெஅடிலான் கட்சியின் துணை தலைவர் பதவிக்கான போட்டி.

19. அன்வாரால் ரபிசியை கட்டுபடுத்த முடியவில்லை. துணை தலைவர் பதவிக்கு ரபிசி போட்டியிட்டால் கண்டிபாக தோற்று போய் விடுவார் என்பது ரபிசிக்கே தெரியும். தெரிந்தும் போட்டியிடுகிறார்.

20. அஸ்மின் அலி அன்வார் இப்ராஹிமின் தீவிர விசுவாசி. நேர்மையானர். பொறுமைசாலி. கெட்டிகாரரும்கூட. அன்வாருக்கு பிறகு பிரதமர் பதவிக்கு தகுதியானர் அஸ்மின் அலி என்பது அனைவராலும் ஒத்துக் கொள்ளகூடிய ஒன்றாகும்.

21. இது ரபிசிக்கு மன உளைச்சலை கொடுத்திருக்க வேண்டும். அதன் வெளிபாடுதான் கெஅடிலான் கட்சியின் துணைதலைவர் பதவிக்கு ரபிசி போட்டியிட தன்னை அறிவித்துக் கொண்டது.

22. அன்வார் துணை பிரதமர் அல்லது பிரதமர் ஆவதற்கு தடையாக இருப்பது துன் மகாதீரோ அல்லது அஸ்மின் அலியோ கிடையாது. அன்வாரின் மனைவி வான் அசிசாதான் அன்வாருக்கு தடையாக உள்ளார். இப்போது வான் அசிசா அன்வாருக்காக தன் துணை பிரதமர் பதவியையும் பண்டான் நாடாளுமன்ற தொகுதியையும் விட்டு கொடுக்க வேண்டும்.

23. வான் அசிசா துணை பிரதமராக நீடிக்கும் வரை அன்வார் அமைச்சராகவோ அல்லது அரசாங்கத்தில் எந்த உயர் பதவியும் வகிக்க முடியாது. அன்வார் அமைச்சராக பதவி ஏற்றால் தன் மனைவி வான் அசிசாவுக்கு கீழ்தான் பணியாற்ற வேண்டிய நிலை வரும். தன் மனைவியின் கீழ் பணியாற்றுவதை அன்வார் ஒருபோதும் விரும்ப மாட்டார். இது அன்வாருக்கு சங்கடத்தை கொடுக்கும்.

24. அன்வார் இப்ராஹிமின் மாற்றுதான்(Substitute) வான் அசிசா. அன்வாருக்கு பதிலாக, அன்வாரின் இடத்தை நிரப்புவதற்கு பினாமியாகத்தான் வான் அசிசா இப்போது வரை பார்க்கப்படுகிறார். தேர்தலுக்கு முன் வான் அசிசாவை துணை பிரதமராக அறிவித்தது அன்வாருக்காக. அது அன்வாரின் பதவி. அந்த பதவியை வான் அசிசாதான் தன் கணவருக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்.

25. இப்போது அன்வாருக்கு நாட்டின் பேரரசரிடமிருந்து பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதால், அன்வார் துணை பிரதமராகவோ அல்லது பிரதமராகவோ ஆவதற்கு எந்த தடையும் இல்லை. இங்கு தடை வான் அசிசா வடிவில் உள்ளது.

26. நாளையே துன் மகாதீர் பதவி விலகிக் கொண்டால், பிரதமராக அன்வார் பதவி ஏற்றுக் கொள்வார் என வைத்துக் கொள்வோம், துணை பிரதமராக வான் அசிசா நீடிப்பாரா? கணவன் பிரதமராகவும் மனைவி துணை பிரதமராகவும் இருப்பார்களா? இது பக்காத்தானை பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.

27. தேர்தல் முடிந்த மறுநாள் 10 மே 2018 இரவு 9.45-க்கு துன் மகாதீர் நமது நாட்டின் ஏழாவது பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றுக் கொண்ட அதே இரவில் 11 மணிக்கு நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அன்வார் விடுதலையை மகாதீர் அறிவித்தார்.

28. அன்வார் விடுதலையை குறித்து நாட்டின் பேரரசரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும் அன்வாருக்கு உடனடி விடுதலை கிடைக்கும் என்றும் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் காரியமாக அன்வாரின் விடுதலையைத்தான் மகாதீர் அறிவித்தார்.

29. ஆனால் அவர் விடுதலையாவது புதன்கிழமை வரை(16 மே 2018) தள்ளி போனது. அதற்குள் 12-ஆம் திகதி வான் அசிசா அதிகாரபூர்வமாக துணை பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

30. அன்வார் விடுதலையாகி நடந்த முதல் பக்காத்தான் தலைவர்கள் உச்சமன்ற கூட்டம் நடந்தபோது அன்வார் அதில் கலந்துக் கொண்டார். அதன் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்திலும் அன்வார் கலந்துக் கொண்டார்.

31. நாட்டின் ஆலோசனை மன்றம் இனி ஆறு பேராக செயல்படும் என மகாதீர் அறிவித்தார். Its not top 5. Its top 6. Included Anwar Ibrahim – Tun Mahathir.

32. அதன் பிறகு நடந்த எந்த பக்காத்தான் தலைவர்கள் உச்சமன்ற கூட்டத்திலும் அன்வார் கலந்துக் கொள்ளவில்லை. கெஅடிலான் கட்சியின் கூட்டத்திலும் அன்வார் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். வெளிநாடுகளுக்கு கிளம்பி போய்விடுகிறார்.

33. இந்த சூழ்நிலையில்தான் கெஅடிலான் கட்சியின் தலைவர் பதவிக்கு அன்வார் போடியிட போவதாக அறிவித்துள்ளார். தற்போது கெஅடிலான் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருவது வான் அசிசா.

34. நூருல் இசாவுக்கு துணை அமைச்சர் பதவி கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் நூருல் இசாவும் மெதுவாக ஓரங்கட்டப்பட்டார்.

35. துன் மகாதீருக்கு நூருல் இசா மீது தன் அன்பு உண்டு. தற்போது பக்காத்தான் கூட்டணி அமைவதற்கு நூருல் இசாவின் பங்கு மிக பெரியது. கெஅடிலான் கட்சியின் பெரும் பயணத்தில் நூருல் இசாவின் உழைப்பு அளப்பரியது. ஆனால் நூருல் இசாவுக்கு தற்போதைய அமைச்சரவையில் இடம் இல்லாமல் போய்விட்டது.

36. நூருல் இசாவுக்கு பதவி கொடுக்க வேண்டுமா இல்லையா என்கிற முடிவை கெஅடிலான் கட்சிதான் எடுக்க வேண்டும். மகாதீர் அல்ல. கட்சி சார்பாக பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டிய பொறுப்பு கட்சி தலைவர் என்கிற முறையில் வான் அசிசாவிடம் மட்டுமே உள்ளது. ஆனால் ஏனோ வான் அசிசா நூருல் பெயரை அமைச்சர்/துணை அமைச்சர் பட்டியலில் சேர்க்க விரும்பவில்லை.

37. அன்வார் பிரதமராக பதவி ஏற்றால், அஸ்மின் துணை பிரதமராக பதவி ஏற்பதற்கு வழிவிடும் வகையில் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிலிருந்து விலகி மத்திய அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டார். இங்கே அஸ்மின் அலி அன்வாருக்கு போட்டி அல்ல.

38. அன்வார் துன் மகாதீர் இடத்துக்கும்; அஸ்மின் அலி வான் அசிசா இடத்துக்கும் வருவதற்கு வழிகள் அமைக்கப்படுகிறது.

39. நாட்டின் பொது தேர்தலில் வெற்றி பெற்றால் அன்வாரை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக துன் மகாதீர் தேர்தல் பரப்புரைகளில் உறுதி மொழி அளித்தார். தேர்தலுக்கு பிறகு தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

40. தன் கணவருக்காக இந்த பதவிகளை வகித்து வருவதாகவும், அன்வார் விடுதலையானவுடன் இந்த பொறுப்புகளை அன்வாரிடம் ஒப்படைத்துவிட தயாராக இருப்பதாகவும் வான் அசிசா நாட்டின் பொது தேர்தல் பரப்புரையின் போது கூறி வந்தார்.

41. இப்போது அன்வார் விடுதலையாகி வந்து விட்டார். வான் அசிசா தன் பதவிகளை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும். அன்வார் துன் மகாதீர் இடத்துக்கு வரவேண்டும் என்றால், வான் அசிசா தன் துணை பிரதமர் பதவியை அன்வாருக்கு விட்டு கொடுக்க வேண்டும்.

42. பதவி மாற்றம் எந்த சிக்கலும் இன்றி சுபமுமாக நடக்க வேண்டும் என்றால் முதலில் வான் அசிசா பண்டான் நாடாளுமன்ற தொகுதியையும், தன் துணை பிரதமர் பதவியையும் தன் கணவர் அன்வாருக்கு விட்டு கொடுக்க வேண்டும். ஆனால் வான் அசிசா இதற்கு தயாரா?

இது அநேகன் வாசகர் மதியழகன் முனியாண்டியின் தனிப்பட்ட கருத்தாகும். இது அநேகனின் நிலைப்பாடு அல்ல           – ஆசிரியர்