ஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி: 2ஆவது தங்கப்பதக்கத்தை வென்றார் ஸ்ரீ அபிராமி!

பேங்காக், ஆக. 6-

ஆசிய ஸ்கெட் ( பனித் தரையில் நடமாடும் சாகச போட்டி) சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்ரீ அபிராமி (வயது 6) 2ஆவது தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றதை அவரது தந்தை சந்திரன் பாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் முதல் பிரிவில் தங்கம் வென்று ஸ்ரீ அபிராமி சாதனை படைத்துள்ளார். உலகளாவிய நிலையில் மலேசியாவைப் பிரதிநிதித்து ஸ்கேட் போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற முதல் மலேசியராகவும் இவர் விளங்குகின்றார்.

இந்த மகத்தான வெற்றியையும் மலேசியாவின் 7ஆவது பிரதமரான துன் டாக்டர் மகாதீருக்கு சமர்ப்பிப்பதாக ஸ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திட்டுள்ளார்.

சமூக தளங்களில் ஶ்ரீ அபிராமி இப்போது டிரண்டிங்கில் உள்ளார். அநேகனின் செய்தியை பலர் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.