புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தொழிலாளர்களை ஏமாற்றும் நம்பிக்கை கூட்டணி! பிஎஸ்எம் சாடல்
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

தொழிலாளர்களை ஏமாற்றும் நம்பிக்கை கூட்டணி! பிஎஸ்எம் சாடல்

பெட்டாலிங் ஜெயா, ஆக. 6-

நாடு முழுவதும் குறைந்தபட்ச சம்பளமாக வெ.1,500ஐ அமல்படுத்தாமல் இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசை பிஎஸ்எம் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

குறைந்தபட்ச சம்பளத்தைஏன் உடனடியாக முடிவு செய்ய வேண்டுமென்பது குறித்து பிஎஸ்எம் பலமுறை வலியுறுத்தியுள்ளது என அதன் தொழிலாளர்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர், எம்.சிவரஞ்சனி தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து கடந்த 2 ஆண்டு காலமாக நாங்கள் விவாதித்து வருகிறோம். இதில் எங்களின் கருத்துகளை நிறைய கூட்டங்களில் மனித வள அமைச்சு செவிமெடுத்துள்ளது. ஆனால் இதில் ஒத்தி வைக்கப்படுவதற்குக் காரணமே செலவு அதிகரிப்பை முதலாளிமார்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

இதில் பக்காத்தான் ஆட்சி 5 ஆண்டு முடிவுறும் தருவாயில்தான் சம்பளம் உயர்த்தப்படும் என்று கூறுவது குறித்து எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் பக்காத்தான் ஆட்சியைக் கைப்பற்றியதும் குறைந்தபட்ச சம்பளத் தொகை இருந்திருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடம் சிவரஞ்சனி குறிப்பிட்டார்.

தற்போது தீபகற்ப மலேசியாவின் குறைந்தபட்ச சமளம் வெ.1,000 மற்றும் சபா சரவாவிற்கு வெ.920ஆக உள்ளது. இந்த சம்பளத்தை சீராக்கி அதை வெ.1,500ஆக உயர்த்துவது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் செயல்படுத்துவதாக உறுதியளித்த 10 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

முன்னதாக தொழிலாளர்களின் சம்பள உயர்வுச் சுமையை முதலாளிமார்கள் ஏற்றுக் கொள்வது சற்றும் நியாயமில்லை. இதற்கு முக்கியக் காரணம் உதவித் தொகை வழங்க அரசிடம் பணமில்லாததே ஆகும் என்று மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனம் (எம்இஎப்) கூறியது.

இதனிடையே, ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வுக்கான தொகை குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று குலசேகரன் கூறியது பற்றி குறிப்பிடுகையில், இதை முறையாகச் செய்ய முடியாததை மனித வள மைச்சு இதற்கு முன் நிரூபித்துள்ளது.

கடந்த 2013இல் குறைந்தபட்ச சம்பளத்திற்கான புதிய தொகை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் உண்மையில் அதை 2015ஆம் ஆண்டிலேயே அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் 2016இல்தான் அமல்படுத்தப்பட்டது.

இதில் 25 மாதங்கள் கடந்து விட்ட பிறகும் நாம் இன்னும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பக்காத்தான் ஹாராப்பான் இந்தத் தொகை பற்றி கடந்த மாதத்திலேயே அறிவித்து விட்ட போதிலும் ஏன் இன்னமும் ஒத்தி வைத்துக் கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை என்று சிவரஞ்சனி மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன