மென்செஸ்டர், ஆகஸ்ட்.7 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் புதிய பருவம் தொடங்க இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து அதன் முன்னணி நட்சத்திரம் போல் பொக்பா வெளியேற விருப்பம் கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

மென்செஸ்டர் யுனைடெட்டில் இருந்து பொக்பாவை வெளியேறச் செய்யும் முயற்சியில் அவரின் முகவர் மினோலா ராயோலா, இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ளதாக ஸ்பெயின் விளையாட்டு நாளிதழ் முன்டோ டெப்போர்த்திவோ தெரிவித்துள்ளது. 25 வயதுடைய பொக்பாவை, ஸ்பெயினின் பார்சிலோனா அல்லது இத்தாலியின் யுவன்டசுக்குக் கொண்டு செல்ல ராயோலா ஆலோசித்திருப்பதாக கூறப்படுகிறது.

பொக்பாவை விலைக்கு வாங்கும் நோக்கத்தில் பார்சிலோனா தற்காப்பு ஆட்டக்காரர் யேரி மினா, ஆன்ட்ரி கோமேசை மாற்று ஆட்டக்காரர்களாக வழங்க முன் வந்திருப்பதாகவும் டெய்லி மெயில் கூறுகிறது. கடந்த மாதம் ரஷ்யாவில் முடிவடைந்த 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் கிண்ணத்தை வாகை சூட பொக்பா முக்கிய பங்கை ஆற்றினார்.

எனினும் பொக்பாவின் வெற்றி குறித்து கருத்துரைத்த மென்செஸ்டர் யுனைடெட் ஜோசே மொரின்ஹோ, அந்த ஆட்டக்காரரின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடும் வகையில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். மொரின்ஹோவின் இந்த கருத்துகளில் பொக்பா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த பருவத்தில் மொரின்ஹோவுக்கும் பொக்பாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பெரும்பாலான ஆட்டங்களில் பொக்பாவை களமிறக்கமால் மொரின்ஹோ தனது இறுமாப்பை வெளிப்படுத்தினார். இந்நிலையில் பொக்பாவை விற்க மொரின்ஹோ முடிவு செய்தால், அது மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை சினமூட்டும் என்பது குறிப்பிடதக்கது.