கலைஞர் உடல்நிலை கவலைக்கிடம்; எது வேண்டுமானாலும் நடக்கலாம்

0
3

சென்னை, ஆக 7

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மேலும் கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 26ஆம் தேதி கருணாநிதிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவருக்கு கடந்த 28ஆம் தேதி சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிரவு அவர் மூச்சுவிட திணறியதால் காவேரி மருத்துவமனையில்ன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த அழுத்த குறைவு சீராக்கப்பட்டது.

சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து வழங்கப்பட்ட தீவிர சிகிச்சையின் காரணமாக கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் 30 நிமிடம் உட்கார வைக்கும் அளவுக்கு முன்னேற்றம் இருந்தது. இதனால் 3 நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதி கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. கல்லீரல் பாதிப்பு, சிறுநீர் பாதை தொற்று, மஞ்சள் காமாலை, ரத்த தட்டணுக்கள் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன.

நேற்று காலை கருணாநிதியின் நாடித்துடிப்பிலும் தொய்வு ஏற்பட்டது. இதனால் கருணாநிதி உடல்நிலை நேற்று மதியம் கவலைக்கிடமாக மாறியது.

கருணாநிதி உடல் நிலை மோசமானதால் அவரது குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக காவேரி மருத்துவமனைக்கு வந்தச் செல்கின்றனர். இதனால் காவேரி மருத்துவமனை வளாகம் நேற்று மாலை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க ‘‘தலைவா எழுந்து வா என்று கோஷமிட்டனர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மருத்துவ அறிக்கை காரணமாக தி.மு.க.வினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். மக்கள் மத்தியிலும் நேற்று மாலை முதல் பரபரப்பான மனநிலை காணப்படுகிறது. அனைவரது பார்வையும் காவேரி மருத்துவமனையை நோக்கியே திரும்பியுள்ளது.

கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உலக அளவில் புகழ் பெற்ற டாக்டர் முகம்மது ரேலே வழங்கியுள்ள ஆலோசனையின் பேரில் கருணாநிதிக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. எனவே கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட உள்ள 7ஆவது அறிக்கை மூலம் தெரியவரும். தொண்டர்கள் அனைவரும், கருணாநிதி  உடல் நலம் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.