அன்வாருக்காக செலாயாங் தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயார்! – வில்லியம் லியோங்

கோலாலம்பூர், ஆக. 8-

செலாயாங் நாடாளுமன்ற தொகுதியை பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு விட்டுத் தர தாம் தயாராக இருப்பதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் தெரிவித்துள்ளார்.

அன்வாரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் அவரது மகள் நூருல் இஸ்ஸா அன்வார் தங்களுடைய, முறையே பாண்டான் மற்றும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என நேற்று கூறியிருந்தார்கள். இது பலருக்கு அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. இந்நிலையில் வில்லியம் லியோங் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பேரரசர் சுல்தான் முகமட் V அளித்த அரச மன்னிப்பைத் தொடர்ந்து மே 16 இல் அன்வார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இப்போது பிகேஆரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 வயதான அன்வார் நாடாளுமன்றத்திற்குத் திரும்பவுள்ளார். அவர் ஏதாவதொரு நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு, அமைச்சரவையில் இடம்பெறுவார். பின்னர் துன் மகாதீருக்கு பிறகு பிரதமர் பொறுப்பில் அமர்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.