வெ. 42 மில்லியன் பெற்றதாக நஜீப் மீது  3 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர், ஆக, 8-

எஸ்ஆர்சி எனப்படும் அனைத்துலக நிறுவன ஊழல் விவகாரம் தொடர்பில் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மீது மேலும் மூன்று புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளி பணம் நஜீப்பின் சொந்த வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முதலில் 2 கோடியே 70 லட்சம் வெள்ளி, பின்னர் 50 லட்சம் வெள்ளி, ஆகக்கடைசியாக 1 கோடி வெள்ளி  என தொடர்ந்து 3 முறை ரெந்தாஸ் எனப்படும்  ஆன்லைன் அந்தப் பணம் நஜீப்பின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது நஜீப்பிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி வரையில் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்படுகிறது.

அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டு சிறை தண்டனையும், பெறப்பட்ட ஊழல் பணத்தைக்  காட்டிலும் 5 மடங்கு அபராதமும் அல்லது 50 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.