சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தடுமாறும் மென்செஸ்டர் யுனைடெட் ; புதிய ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவாரா மொரின்ஹோ !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

தடுமாறும் மென்செஸ்டர் யுனைடெட் ; புதிய ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவாரா மொரின்ஹோ !

மென்செஸ்டர், ஆகஸ்ட்.9- 

2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை ( மலேசிய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை ) அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள வேளையில், உலகம் முழுவதும் கோடி கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து தடுமாறிக் கொண்டுள்ளது.

புதிய ஆட்டக்காரர்களை வாங்குவதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை முடிவடையவிருக்கும் வேளையில், மென்செஸ்டர் யுனைடெட்டில் புதிய ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவதில் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ திணறி வருகிறார். பிரேசிலின் பிரெட், போர்ச்சுகலின் டியாகோ டாலோட் என இரண்டு ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்துள்ள மென்செஸ்டர் யுனைடெட் ஸ்டோக் சிட்டியில் இருந்து கிரான்ட் என்ற கோல் காவலரை வாங்கியுள்ளது.

மென்செஸ்டர் யுனைடெட்டை மேலும் பலப்படுத்த ஒரு தற்காப்பு ஆட்டக்காரரும், மத்திய தாக்குதல் ஆட்டக்காரரும் தேவைப்படுவதாக மொரின்ஹோ தெரிவித்துள்ளார். கோடைக் கால விடுமுறை தொடங்குவதற்கு முன்பாகவே தமக்கு தேவைப்படும் ஆட்டக்காரர்களின் பெயர் பட்டியலை நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டதாக மொரின்ஹோ தெரிவித்தார்.

ஆனால் அந்த ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவதில் தலைமை நிர்வாக அதிகாரி எட் வூட்வேர்ட் சிறப்பாக செயல்படவில்லை என மொரின்ஹோ கருதுகிறார். அண்மையில் அமெரிக்காவில் மென்செஸ்டர் யுனைடெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது தம்மை சந்திக்க வந்த வூட்வேர்ட்டிடம் மொரின்ஹோ சரியாக பேசவில்லை.

மென்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேற போல் பொக்பா, அந்தோனி மார்சியல் திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கும் வேளையில் மொரின்ஹோ மிகப் பெரிய நெருக்கடியில் உள்ளார். கடந்த பருவத்தில் பிரீமியர் லீக் கிண்ணத்தை வென்ற மென்செஸ்டர் சிட்டிக்கு மீண்டும் மிகப் பெரிய போட்டியை வழங்கக்கூடிய நிலையில் மென்செஸ்டர் யுனைடெட் இல்லை.

மென்செஸ்டர் யுனைடெட்டின் பரம வைரியான லிவர்பூல்,  பாபின்ஹோ, நாபி கெய்தா, ஷெர்டான் ஷக்கிரி, ஆலிசன் என புதிய ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.மென்செஸ்டர் சிட்டி , லெய்செஸ்டர் சிட்டியில் இருந்து ரியாட் மாஹ்ரேசை வாங்கியுள்ளது. அதேவேளையில் அர்செனலும்  அதிகமாக புதிய ஆட்டக்காரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால் மென்செஸ்டர் யுனைடெட் புதிய ஆட்டக்காரர்களைப் பெறுவதில் தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறது. லெய்செஸ்டர் சிட்டியின் ஹாரி மகுவேயர், பாயேர்ன் மூனிக்கின் ஜெரோம் போத்தேங், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் டோபி ஆல்டர்வெய்ட், செல்சியின் கேர்ட் சூமா ஆகியோரின் பெயர்கள் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்புடன் தொடர்ந்து இணைத்து பேசப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன