சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வெ. 1800 கோடி ஜி.எஸ்.டி. பணம் மாயம் : நஜீப் உட்பட நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராகப் கைரி போலீஸ் புகார்!
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

வெ. 1800 கோடி ஜி.எஸ்.டி. பணம் மாயம் : நஜீப் உட்பட நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராகப் கைரி போலீஸ் புகார்!

கோலாலம்பூர், ஆக. 9
முன்னாள் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் புகார் செய்துள்ளார். அதோடு இந்த விவகாரம் தொடர்பில் எம்ஏசிசியிலும் புகார் செய்யப் போவதாக அவர் குறிப்பிட்டார்.

திருப்பி கொடுக்கப்பட்ட ஜி.எஸ்.டி. பணமான 1800 கோடி வெள்ளி முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தால் திருடப்பட்டுள்ளது என நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது தொடர்பில் கைரி இந்த புகாரை மேற்கொண்டுள்ளார். நிதியமைச்சின் உள் விசாரணைக்கு அப்பாற்பட்டு லிம்மின் இந்த அறிக்கை முழுமையாக புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கைரி தன்னுடைய டுவிட்டரில் கூறினார்.

லிம் வெளிப்படுத்திய குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என்பதை உறுதி செய்ய இதன் மூலம் புலன் விசாரணை நடத்த முடியும் என்று அவர் தெரிவித்தார். அப்போதைய நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக இந்த புகார்கள் செய்யப்பட்டுள்ளது என கைரி குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2018 விற்பனை வரி மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. பணத்தை முன்னாள் அரசு பயன்படுத்தி விட்டதாகவும் இதனால் பணத்தை கொடுப்பதில் ஈராண்டுகள் வரை தாமதம் ஏற்பட்டிருக்கிறது எனவும் லிம் மக்களவையில் கூறியிருந்தார்.

2 வாரங்களில் கொடுக்கப்பட வேண்டியது. 2 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் கொடுக்கப்படவில்லை. ஏனெனில் முன்கூட்டியே செலுத்தப்பட்ட இந்த பணம் அறநிதியில் சேர்க்கப்படவில்லை. ஆனால், வருமானமாக ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று லிம் கூறியிருந்தார். இந்த பணம் வருமானமாகக் கருதப்பட்டதால் முன்னாள் அரசாங்கம் அதனை பயன்படுத்தி விட்டது.

ஜி.எஸ்.டி. பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நான் இங்கு கூறவரவில்லை. ஆனால் திருப்பி செலுத்தப்பட வேண்டிய பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் சொன்னார். இந்த குற்றச்சாட்டிற்கு லிம் ஆதாரத்தை முன் வைக்க வேண்டும் என்று கைரி வலியுறுத்தினார்.

திருப்பி செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. பணத்தில் 18 பில்லியன் வெள்ளி குறைந்திருக்கிறது என்பதை சுங்கத்துறை கணக்காய்வு கண்டுபிடித்திருப்பதாகவும் லிம் கூறியிருக்கிறார். எனினும், இந்த முறைகேட்டை அவர் நஜீப்புடன் தொடர்பு படுத்தி பேசவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன