புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > செடிக் சீரமைக்கப்படும் மற்ற சிறுபான்மை மக்களின் நலனும் காக்கப்படும் வேதமூர்த்தி உறுதி!
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

செடிக் சீரமைக்கப்படும் மற்ற சிறுபான்மை மக்களின் நலனும் காக்கப்படும் வேதமூர்த்தி உறுதி!

கோலாலம்பூர், ஆக. 9-

‘செடிக் என்று பரவலாக அறியப்பட்ட இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தற்பொழுது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

செடிக் நடவடிக்கை குறித்தும் செடிக்கிடமிருந்து தொடர்ந்து மானியம் பெற்ற 800-க்கும் மேற்பட்ட அரசுசாரா அமைப்புகளைப் பற்றியும் முழு ஆய்வு மேற்கொள்ளப்படும் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான நிதி, சம்பந்தப்பட்ட தரப்பினரை முறையாகச் சென்று சேர்ந்ததா என்பதை உறுதி செய்வதும் முறைப்படுத்துவதும் இந்த ஆய்வின் முதல் நோக்கமாகும்.

அதே சமயம், அரசு சாரா அமைப்புகள், பொதுநல ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகிய தரப்பினரை ஒருங்கிணைத்து செடிக் பிரிவை மறுசீரமைப்புச் செய்யவும் நவீனப்படுத்தவும் அமைச்சு எண்ணம் கொண்டுள்ளது.நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை உறுதிசெய்வதும் இந்திய சமுதாய நலிந்த பிரிவினருக்குரிய அனுகூலம் முறையாக சேர்வதையும் உறுப்படுத்துவதுதான் அமைச்சு மேற்கொள்ள விருக்கும் இந்த நடவடிக்கையின் முதன்மைக் கூறு என்று அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.

இதன் தொடர்பில் முந்தைய தேசிய முன்னணி அரசு அரசியல் நோக்கத்திற்காக தன் ஆதரவாளர்களை செடிக் மூலம் அமர்த்திக் கொண்டதைப் போலல்லாமல், பொருத்தமான நிர்வாக மேம்பாட்டு அதிகாரிகளையும் குடிமைப் பணியாளர்களையும் நியமிக்க ஒற்றுமை அமைச்சு உறுதி பூண்டுள்ளது. உண்மையில் தற்போதைய செடிக் அமைப்பு என்பது, முன்னாள் இந்திய சிறப்புப் பணிக்குழு, தமிழ்ப் பள்ளி செயல் திட்டப் பிரிவு, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு சிறப்புச் செயலகம்(சீட்) ஆகியவற்றின் கூட்டுக் கலவையாகத்தான் இருக்கிறது.

இந்திய சமுதாயத்திற்காக செடிக் பிரிவை சீரமைத்து புத்துயிர் அளிக்க இருப்பதைப் போல, நாட்டில் உள்ள ஏனைய சிறுபான்மை இனங்களின் சமூக-பொருளாதார மேம்பாடு குறித்தும் தேசிய ஒற்றுமை மற்றும சமூக நல அமைச்சகம் உரிய கவனம் செலுத்தும் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன