கெந்திங் ஹைலண்ட்ஸ், ஆக. 8-

அடுத்தாண்டு முதல் மாணவர்கள் பள்ளிக்கு கைத்தொலைப்பேசியை தவிர இதர கையடக்க கருவிகளை கொண்டு வருவதற்கு கல்வியமைச்சு அனுமதியளிக்கவிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சீர் காலீட் தெரிவித்தார்.

பள்ளிகளில் கட்டுப்பாட்டுடன் கையடக்க கருவிகளை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கும் முடிவு தற்போது இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அதற்கான வழிகாட்டல் நெறிமுறைகள், சுற்றறிக்கை வெளியீடு முதலானவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஆயினும், பள்ளிகளில் மாணவர்கள் கைத்தொலைப்பேசியை பயன்படுத்தினால் அது பாட போதனையின் போது அவர்களின் கவனத்தை பாதிப்பதோடு தொந்தரவையும் ஏற்படுத்தும் என்பதால் அதற்கு அனுமதியளிக்கப்படாது.

இந்த தொழில்நுட்ப காலத்தில் வளர்ச்சி கண்ட பல நாடுகளில் உள்ள பள்ளிகளில் பாட போதனைகளை எளிமையாக்கும் நோக்கில் மாணவர்கள் கையடக்க கருவிகளை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எதுவாக இருப்பினும், கையடக்க கருவிகள் பயன்பாடு குறித்து சில வழிமுறைகளை கண்டறிய கல்வியமைச்சு மிக நுணுக்கமாக ஆராய்ந்து வருவதாக செய்தியாளர்களிடம் மாட்சீர் காலீட் கூறினார்.