கோலாலம்பூர், ஆக. 10
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீதான குற்றவியல் வழக்குகளை ஊடகங்கள் விவாதிக்கத் தடை விதிக்க வேண்டுமென்ற மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது.

அந்த மனுவின் மீதான வாதத்தில் நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி பல கேள்விகளை எழுப்பி தமது வாதத்தை வெளிப்படுத்தினார். அவர் தமது வாதத்தில், இந்த வழக்கை நடத்த அரசுத் தரப்பு தயார் நிலையில் இல்லையென்றும் அது பிரதிவாதித் தரப்புக்கு நியாயத்தை வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்கின் சாராம்சம் அடங்கிய குறுவட்டை மட்டுமே அளித்ததாகவும் அதனை நகலெடுத்து அளித்திருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார். தமது தரப்பினர் அதனை ஆவணமாகத் தயாரிக்க சில நாள்களை எடுத்துக் கொண்டதாக உயர்நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் கூறினார். அரசுத் தரப்பும் தற்காப்புத் தரப்பும் வழக்கிற்கான ஆவணங்களை ஒரு நாளைக்கு முன்னதாகத்தான் பரிமாறிக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றம் ஜூலை 4இல், நஜீப்பின் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வெளிப்படையாக விவாதிப்பதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.