கோலாலம்பூர்,ஆக 10-
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு மோட்டார் சைக்கிளிலேயே பல மண்ணின் மைந்தரான எஸ்.கதிரவன்.

மோட்டார் சைக்கிளிலேயே தாய்லாந்து, மியன்மார், பூட்டான், நேப்பாள், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய ஏழு நாடுகளை தன்னந்தனியாக வலம் வரப் புறப்பட்டுள்ளார் மலேசியாவைச் சேர்ந்த கதிரவன்.

மொத்தம் 21,000 கிலோ மீட்டர் தூரத்தை உட்படுத்திய இப்பயணத்தை பிஎம்டபிள்யூ 1200 சிசி ரக மோட்டார் சைக்கிளில் கடந்து செல்லவிருக்கிறார்.

இதற்கு முன்பு குழுவாக மோட்டார் சைக்கிளில் தொலை தூர பயணத்தில் ஈடுபட்ட இவர் இம்முறை தனிநபராக பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்பயணத்தைத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காட்டில் மரங்களை அழிக்கக்கூடாது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். மரங்கள் அழிக்கப்பட்டால் பூமியில் வெப்பம் அதிகமாகும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சம்பந்ததப்பட்ட நாடுகளில் சந்திக்கும் மக்களிடம் எடுத்துக் கூற விரும்புவதாக அவர் சொன்னார்.

இன்று தனது பயணத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பல அனுபவங்களின் அடிப்படையில் தற்போது 64 நாள்கள் அடங்கிய இந்த நீண்ட தூர பயணத்தைத் தொடங்கியிருக்கும் கதிரவன் எதிர்வரும் அக்டோபர் 14ஆம் தேதி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதிரவனின் இந்த சாதனைப் பயண தொடக்க விழாவில் வீவா ஹோம் பேரங்காடி மையத்தின் உரிமையாளர் டத்தோ டி.கே. லிம், அதன் பங்காளி லிம் சியூ, தலைமை நிர்வாகி அலெக்ஸ் சுவா, பணியாளர்கள், கதிரவனின் மனைவி கமலா, பிள்ளைகள் உள்பட குடும்பத்தார், நண்பர்கள், சக மோட்டார் சைக்கிளோட்டிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.