கிளானாஜெயா, ஆக. 11-

மலேசியக் கிண்ணப்போட்டிகளில் முதன் முறையாக களம் கண்டாலும் மிஃபாவின் அதிரடியான ஆட்டம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சாம்பியனான ஜேடிதி யை பந்தாடிய நமது அணி கிளந்தான் அணியையும் வெற்றிக் கொண்டுள்ளது.

இந்த வெற்றிக்கு பின்னால் பயிற்றுநர், நிர்வாகி, விளையாட்டாளர்கள் என பலரின் உழைப்பு இருந்துள்ளது. அந்த வகையில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் தொடர்ந்து பேராதரவு கொடுத்து வரும் சமுதாய பெருமக்களுக்கு நன்றியை பறைசாற்றுவதாகவும் மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

கிளானாஜெயா எம்.பி.பி.ஜே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நமது அணி கிளந்தான் அணியை 2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. நமது அணியின் சார்பில் ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் ஷெர்மன் பெனால்டி முறையில் ஒரு கோலையும்
அதனைத்தொடர்ந்து 74ஆவது நிமிடத்தில் சத்ருணன் அணிக்கான 2ஆவது கோலையும் புகுத்தினர்.

அனுபவம் வாய்ந்த கிளந்தான் அணியை வெற்றிக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வெற்றிக்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என அணியின் தலைமைப்பயிற்றுநர் கே.தேவன், நிர்வாகி துவான் ஏ.எஸ்.பி ராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

மிஃபா அணியின் பயிற்றுநர் கே.தேவன், நிர்வாகி துவான் ஏ.எஸ்.பி ராஜனுடன் டத்தோ டி. மோகன்

நமது அணி பல வெற்றிகளை நிலைநிறுத்தி சமுதாயத்திற்கு பெருமை தேடித்தந்துள்ள நிலையில் நம்மவர்களின் ஆதரவு தொடர வேண்டுமென மிஃபாவின் செயலாளர் அன்பானந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்