கோலாலம்பூர், க.

பிகேஆர் கட்சியின் உயர் மட்ட பதவிகளில் ஒன்றான உதவித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிட தமக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. அதனால் தான் இம்முறை உதவித் தலைவர் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

அண்மையில் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுத் தாக்கலைச் செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்த போது அவ்வாறு கூறினார்.

மலேசியாவைப் பொறுத்தவரையில் ஏராளமான மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்கிய அனுபவம் தமக்கு இருக்கிறது. இந்த மலேசிய சமுதாயத்தை கல்வி, பொருளாதாரம் இவை இரண்டிலும் உயர்த்திவிடுவதற்கான ஒரு வியூகம் வேண்டும். அதனை மேற்கொள்வதற்கான முழு நடவடிக்கைகளையும் திட்டமாகக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தம்மைப் பொறுத்தவரையில் தமக்கு தெரிந்ததெல்லாம் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரது குடும்பமும் மட்டுமே. 1998ஆம் ஆண்டு தொடங்கி தாம் முழுமையாக அன்வார் இப்ராஹிமோடு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியம்

இன்று கெஅடிலான் கட்சியில் எத்தனை பிளவுகள் இருந்தாலும், அது ஒருபுறம் இருக்கட்டும். எனக்கு தெரிந்தவர் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி வெற்றி பெற்ற அன்வார் இப்ராஹிம் மட்டுமே. அவரது வழிபாதையை பின் தொடர்ந்து தான் இதுவரை பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னமும் அவர பாதையில் தான் பயணிக்கவிருக்கிறோம். கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதேவேளையில் பாடான் செராய் தொகுதித் தலைவர் பதவிக்கும் போட்டியிடும் எல்லாம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

சமயம், கல்வி, பொருளாதாரம், சமூகம் எல்லா அம்சங்களிலும் மலேசியர்கள் உயர்த்திவிட வேண்டும். அந்த வகையில் தாம் எல்லா நிலையிலும் எல்லோருக்கும் மிக முழுமையான சேவையை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சி வட்டாரத்தில் தம்முடைய பெயரைச் சொன்னால் தாம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒருவராக இருப்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் தற்போது நாடு முழுவதும் உள்ள 222 தொகுதிகளையும் ஒரு சுற்று சுற்றி வந்து இந்த உதவித் தலைவர் தேர்தலுக்கான ஆதரவைத் திரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கெஅடிலான் கட்சியின் 2 அணி இருப்பதாக சொல்லப்படும் வேளையில், உங்களுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டபோது எனக்கு யாரும் எதிரி கிடையாது. நான் எல்லோரையும் அரவணைத்து பழகுகிறேன். பெர்லிஸிலிருந்து ஜொகூர் மாநிலம் வரை பிறகு சபா, சரவா அனைத்து மாநிலங்களிலும் இருக்கின்ற எல்லாத் தொகுதிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சந்திப்புக் கூட்டம் நடத்துகிறேன். இது எனக்கான வெற்றி வாய்ப்பை அமைத்துக் கொடுக்கும் என நம்புகிறேன் என்று கூறினார்.

நான் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. அரசியல் வந்து தான் என்னை நான் பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லா விதத்திலும் வளமான வாழ்க்கையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார்.

அதைப் பயன்படுத்தி இதுவரை மக்களுக்கு போதுமான உதவிகளை வழங்கி வந்திருக்கிறேன். இதுவரை நான் செய்த சேவைகள், உதவிகள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் இருந்தாலும் கட்சியின் உதவித் தலைவர் பொறுப்புக்கு வர கட்சி உறுப்பினர்கள் தமக்கு முழு ஆதரவு வழங்கினால் தம்மால் முழு சேவையாற்ற முடியும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கட்சித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து செய்யுங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.