ஜிஎஸ்டி வரி காணாமல் போன விவகாரம்:காணாமல் போனது அதிகமான தொகை! – லிம் குவான் எங்

கோலாலம்பூர், ஆக. 13-

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட (ஜிஎஸ்டி) பொருள் சேவை வரியின் தொகையானது இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் அது சம்பந்தமாக அறிவித்த தொகை வெ. 1,791.1 கோடியை விட அது தற்போது வெ. 1,924.8ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இத்தொகையானது 2015ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு மே 31 வரைக்குமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சின் அதிகாரி ஒருவர் செய்த பிழையினால் சிறப்புக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியானது 148 கோடியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் அந்தத் தொகை வெ. 148.6 மில்லியன்தான்.
முந்தைய அரசின் நிர்வாகக் கோளாறும் மற்றும் திறன் இன்மையினாலும்தான் வர்த்தகர்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டிய ஜிஎஸ்டி காணாமல் போயிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

முந்தைய அரசு கணக்கில் தவறு செய்திருக்கலாம் அல்லது கடனை மறைத்து மேலதிகமான நிதி கையிருப்பில் இருப்பதைக் காட்ட முனைந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகர்களுக்குத் திருப்பித் தரப்படபட வேண்டிய ஜிஎஸ்டி வரியானது காணாமல் போனதாக குவான் எங் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்த பின்னர், கடுமையான வாக்குவாதம் அரங்கேறியது.

அதனை ஆராய அமைச்சின் உள்விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் போலீஸ் புகார் ஒன்றை அளித்துள்ள வேளையில், நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லா மலேசிய ஊழல் தடுப்பு ஆணைத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.