வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆட்டிஸம் விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்! – டத்தோ பழனியப்பன் நினைவுறுத்து
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆட்டிஸம் விளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்! – டத்தோ பழனியப்பன் நினைவுறுத்து

சுபாங், ஆக. 13-

ஆட்டிஸம் பிரச்னைகளை எதிர்நோக்கும் பிள்ளைகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து இந்திய பெற்றோர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டுமென சமூக ஒருங்கிணைப்பு இயக்கத்தின் தலைவர் டத்தோ பழனியப்பன் கூறினார். நமது சமுதாயத்தில் இருக்கும் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் ஆட்சிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதுகூட தெரியாமல் இருப்பதுதான் மிகப் பெரிய வேதனையாக உள்ளது என அவர் கவலை தெரிவித்தார்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை கையாள்வது எளிதான காரியமல்ல என பல பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் அதற்கான வழிமுறைகளை பெற்றோர்கள் கற்றுக் கொண்டால், அவர்களை எளிதாகக் கையாள முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கான சிறப்பு சிகிச்சை பயிற்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார். மூளை நரம்பு பாதிக்கப்பட்டதால் வழக்கமான குழந்தைகளைப் போல ஆட்டிஸம் குழந்தைகள் இருப்பதில்லை.

சில நேரங்களில் சட்டென்று கோபப்படுவார்கள். ஒரு விஷயத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு குறைவாக இருக்கும். இன்னும் சில குழந்தைகள் எப்போதும் கனவுலகில் இருப்பார்கள். அவர்களுக்கு படிப்பு வரவில்லை என நாம் நினைப்போம். ஆனால் உண்மையில் அவர்கள் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இது தெரியாத பெற்றோர்கள் அந்தக் குழந்தையை எப்படி வழிநடத்துவது என தெரியாமல் தவறான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பார்கள். இதெல்லாம் கட்டம் கட்டமாக களையவே இந்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுவதாகவும் டத்தோ பழனியப்பன் கூறினார்.

இப்படிப்பட்ட குழந்தைகளை கொண்டுள்ள பெற்றோர்கள் அவர்களை எப்படிக் கையாள்வது என்பதை டோசா ஹௌ சிகிச்சை மூலம் பயிற்சி அளிக்கிறோம். இதன் நுணுக்கங்களை அறிந்து கொண்டால், இப்படிப்பட்ட பிள்ளைகளை எவ்வாறு அணுகுவது என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்களுக்கான நடைமுறைகளை அறிந்து கொண்டால் இப்பிரச்னைகளை எளிதில் களைய முடியும்.

குறிப்பாக இப்படிப்பட்ட பிள்ளைகளை கொண்டுள்ள பெற்றோர்கள் எளிதில் மன உலைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள். இவர்களுக்கும் இந்த பயிற்சி மாற்றத்தை தரும் என டத்தோ பழனியப்பன் கூறினார். இந்த பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. வரும் காலங்களிலும் இது தொடர வேண்டுமென இந்த பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் அம்பிகா கூறினார்.

இந்த பயிற்சியில் 48 பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் பெற்றோர் ஆசிரியர் ஆதரவு இயக்கத்தின் வாரியத் தலைவர் ஜூலியன் வோங், மலேசிய புத்தாக்க அறவாரியத்தின் தலைமை நிர்வாகி தோனி அந்தோணியும் கலந்து கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன