திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > விஜய் ரசிகர்களை இழிவுப்படுத்தவில்லை! மாமா மச்சான் திரைப்பட இயக்குநர் விளக்கம்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

விஜய் ரசிகர்களை இழிவுப்படுத்தவில்லை! மாமா மச்சான் திரைப்பட இயக்குநர் விளக்கம்

கோலாலம்பூர், ஆக. 8-

மலேசியா திரைப்படமான மாமா மச்சான் திரைப்படத்தில் தளபதி விஜய் ரசிகர்களை இழிவுப்படுத்தி விட்டதாக சமூக தளங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் வெளியீடு கண்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் இத்திரைப்படத்தின் இயக்குநர் இந்த விவகாரம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட அந்த காட்சியில் விஜய் ரசிகர்களை தாம் இழிவுப்படுத்தும் நோக்கம் துளியும் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். குறிப்பாக அந்த காட்சியை விஜய் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்து பின்னர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக அந்த காட்சியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை திருடுகிறார்கள். அவர்களை இத்திரைப்படத்தின் கதாநாயகன் பென்ஜி மற்றும் சரவணன் கையும் களவுமாகப் பிடித்து விடுகின்றார்கள். அதில் சரவணன் திருடர்களை அடிப்பதோடு அவர்களை போலிசில் ஒப்படைக்க வேண்டுமென கூறுகிறார்.

அப்போது இதில் சம்பந்தப்பட்ட திருடன்களில் ஒருவன் மன்னித்து விடும்படி பென்ஜியிடம் கூறுகின்றார். அதற்கு பென்ஜி, கை கால்களை இழந்தவர்கள் கூட உழைத்து வாழ்கிறார்கள் உங்களுக்கு ஏன் இந்த திருட்டு வேலை என அறிவுரை கூறி அவர்களை மன்னிக்க முனைகிறார். அப்போது இவர்களை மன்னிக்கக்கூடாது என சரவணன் கூறும் தருணத்தில் பென்ஜி, அந்த திருடனை பார்த்து நீ விஜய் ரசிகனா? அல்லது அஜித் ரசிகனா? என கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த திருடன் விஜய் ரசிகன் என்று கூறுகிறான். அதற்கு பதிலளிக்கும் பென்ஜி அப்ப நீ அடி வாங்குறதுதான் சரி என கூறுகிறார். அந்த காட்சி இதோடு முடிவடைகின்றது.

விஜய் ரசிகர்களை திருடனாகச் சித்தரித்து விட்டார்கள். குறிப்பாக விஜய் ரசிகன் என்று கூறியவுடன் அப்ப நீ அடி வாங்குறதுதான் சரியென கூறியது, மலேசிய விஜய் ரசிகர்களை சினமடைய வைத்துள்ளது. இதனால் பலர் மாமா மச்சான் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கப்போவதில்லை என இயக்குநர் சரவணனுக்கு தனிப்பட்ட முறையில் சமூக தளங்களின் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்கள்.

இதற்கு அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். விஜய் ரசிகனாக இருந்து கொண்டு திருடியது தவறு என்பதால்தான் பென்ஜி நீ அடி வாங்குறதுதான் சரியென கூறியுள்ளார். அதனால் இதை விஜய் ரசிகர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார். எந்த ஒரு நடிகரின் ரசிகர்களையும் இழிவுப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் தமக்கு இல்லையென அவர் கூறியுள்ளார். இதை மலேசிய விஜய் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்பதற்கு இன்னமும் பதிலில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன