கோலாலம்பூர், ஆக 8-

தொழிலாளர்களின் நலனிற்கும் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக அமைவது அவர்களுக்கான வேலை காப்புறுதித் திட்டம்தான். அதனை உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்டமாக அங்கீகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய சோஷியலிஸ்ட் கட்சி எனப்படும் பிஎஸ்எம் நேற்று அறிவுறுத்தியுள்ளது.

வேலை இடங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு தொழிலாளர்களுக்கு இழப்பை வழங்கும் சொக்சோ திட்டம் போலவே தான் இந்தக் காப்புறுதித் திட்டமும் செயல்படும். தொழிலாளர்களுக்கு இந்தக் காப்புறுதி திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், இந்தக் காப்புறுதி திட்டம் தொழிலாளர்களுக்குப் பல இடையூறுகளைக் கொண்டு வரும் எனத் தவறான கருத்தில் சில தரப்பினர் இதற்கு எதிர்ப்புக் காட்டி வருகின்றனர் என  சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரும் பிஎஸ்எம்மின் மத்திய செயலவை உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து சட்ட மசோதா கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் ஆகஸ்ட் 2ஆம் தேதி சொக்சோவின் பிரதிநிதியான பொன்னையா மற்றும் மனிதவள அமைச்சரின் பிரதிநிதியான முகமட் ஹஸாஸியையும் சந்தித்த போது, சட்டம் அதே வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது. ஆனால், அது ஆழமாக ஆராயப்பட வேண்டுமென்பதால் அது ஒத்தி வைக்கப்பட்டது என அவர்கள் தெரிவித்ததாக அவர் நேற்று பிஎஸ்எம் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. வேலை காப்புறுதித்  திட்டத்தின் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் வேலை இழந்தவர்கள் பயனடைய முடியும் எனத் தாங்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டனர். இச்சட்டத் திட்டம் மேலும் ஒத்திவைக்கப்பட்டால் வேலை இழந்த தொழிலாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாவார்கள் என பிஎஸ்எம் கட்சியின் பொதுச் செயலாளர் சிவராஜன் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் சுமார் 38,000 பேரும், 2016ஆம் ஆண்டில் 40,000 பேரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இவ்வாண்டில் 50,000 பேர் வேலை இழக்கும் நிலை உள்ளதாக மலேசிய வேலை வாய்ப்பு சம்மேளனத்தின் ஆருடம் கூறுகிறது. வேலை இழந்தபின் அவர்களது நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை என அவர் வருத்தம் தெரிவித்தார். எனவே, தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் இது சம்பந்தமாக சிறந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.