திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > சாகா தமிழ்ப்பள்ளி இணைக்கட்ட விவகாரம் : சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்!
சமூகம்முதன்மைச் செய்திகள்

சாகா தமிழ்ப்பள்ளி இணைக்கட்ட விவகாரம் : சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்!

ரந்தாவ், ஆக. 8

இங்குள்ள சாகா தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் இன்றளவும் முழுமையாகச் செயல்படக்கூடிய நிலையை இந்த இணைக்கட்டடம் கொண்டிருக்கவில்லை. அதனால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ம.இ.கா. இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் தினாளன் ராஜகோபால் எச்சரித்தார்.

கட்டடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்றளவும் மின்சார வசதிகளும், தண்ணீர் வசதிகளும் மற்றும் சில சீர்படுத்தும் வேலைகளும் முழுமையடையவில்லை. இது பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது என வருத்தத்துடன் இத்தமிழ்ப்பள்ளி வாரியக்குழு தலைவருமான அவர் கூறினார்.

இதனிடையே நேற்று முன்தினம் இத்தமிழ்ப்பள்ளியில் நடந்த பள்ளி வாரியக்குழு சந்திப்புக்கூட்டத்தில் பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக இதுவரை, சாகா தமிழப்பள்ளி தலைமையாசிரியர் கடும் முயற்சியாலும், பள்ளி வாரியக்குழு தலைவர் தினாளனும், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வாவும் இணைந்து கல்வி துணை அமைச்சரான டத்தோ கமலநாதனை சந்தித்ததால் மின்சார வேலைப்பாடுகள் டி.என்.பி ஆல் செய்து முடிக்கப்பட்டன.

தொடர்ந்து, கட்டடத்திற்குள் உள்ள மின்சார வேலைகளும், தண்ணீர் (sains) இணைப்பு வேலைகளும் குத்தகை நிறுவனத்தின் பொறுப்பாகும். குத்தகையாளரின் காரணமாக புதிய கட்டடம் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதோடு அரசாங்கம் தமிழ்ப்பள்ளிக்கு அளித்திருக்கும் வசதிகளை இப்படிப்பட்ட குத்தகையாளர்களால் பயன்படுத்த முடியாமல்போவது வருத்தத்தை அளிப்பதாக தலைமையாசிரியர் கூறினார்.

இனிமேலும், அமைதிகொள்ள முடியாது. கல்வி அமைச்சு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி அமைச்சு புதிய குத்தகையாளர்களையாவது நியமித்து இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதோடு இப்பிரச்னைக்கு எவ்வாறான வகையில் தீர்வு காண முடியுமென்பதை ஆலோசிக்க பள்ளி வாரியக் குழுத் தலைவர், தலைமையாசிரியர் சரஸ்வதி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செல்வராஜா, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நா.முருகன் மற்றும் உறுப்பினர்களுடன் கருத்துகளைப் பரிமாற இக்கூட்டம் கூட்டப்பட்டது . தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் எந்த ஒரு தீர்வும் காணாமல் அமைதியாக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம் என தினாளன் சாடினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன