கோலாலம்பூர், ஆக. 8 –

மக்கள் விரும்பும் வரை தாம் பிரதமர் பொறுப்பில் இருக்கப் போவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளார். தமது பொறுப்புக்களிலிருந்து வெளியேற போவதில்லை என்றும் மக்கள் விரும்பும் வரை தாம் மக்களுக்குச் சேவையாற்றப் போவதாகவும் இன்று நடந்த பொருளாதார மாநாடு ஒன்றில் நஜீப் குறிப்பிட்டார்.

அலங்கார வார்த்தை பேசி பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல் கட்சி தேசிய முன்னணி இல்லையெனக் குறிப்பிட்ட அவர், அது வாக்குகளைப் பெற வேண்டுமென்ற நோக்கத்தில்  செயல்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அரசு நேர்மையான முறையில் நாட்டை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் என்றும்  எதிர்க்கட்சியினர் சீனாவின் முதலீட்டை குறைகூறி பொருள் சேவை வரியை அகற்றப் போவதாகவும் கூறுவது அரசியல் பிழைப்புக்காக என்றும் அதன் மீது  வர்த்தக சமூகம் மிக விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் நஜீப் கேட்டுக் கொண்டார்.

ஜிஎஸ்டி வரியை அகற்றுவதன்  மூலம் ஏற்படும் வெ. 4,100 கோடி வரியிழப்பை எவ்வகையில் அது ஈடுசெய்யும் என்பதை விளக்கவில்லை என்றும் நஜீப் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சியினர் அச்சத்தை உருவாக்கி அரசியல் லாபத்திற்காகப் பொய்களைப் பரப்பி வருவதாகவும் அவர்கள் நாட்டு மக்களுக்காக நல்லதைச் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். நிதியமைச்சருமான நஜீப், அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ளும் என்றும் அத் திட்டங்கள் யாவும் உலக பொருளாதார நிபுணர்களின் பாராட்டைப் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கண்ட திட்டங்கள் யாவும், நாட்டை சரியான பாதையில் நிலை நிறுத்தவும் மிகை வருமானம் பெறும் நாடாக உயர்த்துவுமே என அவர் சுட்டிக் காட்டினார்.