யூ.இ.எப்.ஏ. சூப்பர் கிண்ணம் : ரியல் மாட்ரிட் வென்றது!

ஸ்கோப்யா, ஆக. 8

ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணத்தை வென்ற ஸ்பெய்னின் ரியல் மாட்ரிட் அணியும், ஐரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைடெட் அணியும் யூ.இ.எப்.ஏ. சூப்பர் கிண்ண இறுதி ஆட்டத்தில் மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்யா அனைத்துலக கால்பந்து அரங்கில் இன்று 09-08-2017,  மலேசிய நேரப்படி பின்னிரவு 2.30க்கு சந்தித்து விளையாடின.

இந்த ஆட்டத்தில் உலகின் முதல்நிலை கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் மன்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2 முறை சூப்பர் கிண்ணத்தை வென்று புதிய வரலாறு படைத்தது. ஆட்டம் தொடங்கியதும் மன்செஸ்டர் யுனைடெட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அதன் ஆதிக்கம் 10 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. அதன் பிறகு முழு ஆட்டத்தையும் ரியல் மாட்ரிட் தன்வசம் கொண்டு வந்தது.

மன்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல் கம்பம் நோக்கி ரியல் மாட்ரிட்சரமாறியான தாக்குதல்களை தொடுத்தது. இதன் காரணமாக ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கான முதல் கோலை காசிமிரோ அடித்தார். இதனால் மன்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள். அதன் பிறகும் ஆட்டத்தை ரியல் மாட்ரிட் அணிதான் கொண்டிருந்தது. இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் ரியல் மாட்ரிட் அணிக்குச் சாதகமாக முடிந்தது.

பிற்பாதியில் மன்செஸ்டர் யுனைடெட் தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுக்குமென எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரியல் மாட்ரிட் ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருந்ததோடு, தொடர் தாக்குதல்களையும் முன்னெடுத்து, மன்செஸ்டர் யுனைடெட் அணியை கலங்கடித்தது. இதனிடையே ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்களை திறன்பட முந்தி, ரியல் மாட்ரிட் அணிக்கான 2ஆவது கோலை இஸ்கோ புகுத்தினார்.

2 கோல்கள் வித்தியாசத்தில் ரியல் மாட்ரிட் முன்னிலை பெற்றதால், மன்செஸ்டர் யுனைடெட் அணி திக்குமுக்காடி போனது. இதனிடையே அவ்வணியின் பயிற்றுநர் ஹோஷே  மொரின்யோ ஹாரேராவிற்கு பதில் பெலைனியை களமிறக்கினார். அதன் பிறகு ஆட்டம் மன்செஸ்டர் யுனைடெட் வசம் மாறியது. கோல் புகுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் மன்செஸ்டர் யுனைடெட் விளையாடியது. 62ஆவது நிமிடத்தில் ரொமெலு லுக்காக்கூ மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான கோலை அடித்தார். அதன் பிறகு தொடர் தாக்குதல்களை மன்செஸ்டர் யுனைடெட் அணி முன்னெடுத்தப்போதும், அதன் முயற்சிகள் வெற்றி தரவில்லை. இதனால் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று சூப்பர் கிண்ணத்தை வென்றது.