தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கிய என்.ஜி.கே !

0
5

சூர்யாவின் ’என்ஜிகே’ படம் தீபாவளிக்கு வெளியாகாது என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இயக்குநர் செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகும் என்.ஜி.கே படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் முதலில் தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதே போல் முருகதாஸ் விஜய்யை வைத்து இயக்கி வரும் சர்கார் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ஜிகே – சர்கார் ஆகிய இருபடங்களும் ஒரே நாளில் வெளிவருவதால் இவ்விரு படங்களின் மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். சமூக வலைதளங்களிலும் சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், படப்பிடிப்பு பணிகளில் திட்டமிட்டபடி இல்லாமல் சற்று பின் தங்கியுள்ளோம். நிலவரம் குறித்து மீண்டும் தகவல் அளிக்கிறேன். அதற்குள் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம். அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அடுத்தகட்ட அறிவிப்பை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், இந்த படம் சிறப்பாகவும், ரசிகர்கள் கொண்டாடும் விதத்திலும் உருவாகி வருகிறது. படத்திற்கான பணிகளை முடிப்பதற்கு சிறிது காலம் தேவைப்படுவதால், படம் தீபாவளிக்கு பின்னர் வெளியாகும். படம் வெளியாகும் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் , 2018 தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட அஜித்குமாரின் விஸ்வாசம் கடைசி நேரத்தில் அடுத்த ஆண்டில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தீபாவளி வெளியீடு காண்பதாக அறிவிக்கப்பட்ட சூர்யாவின் என்.ஜி.கே திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கிய சன் பிக்சர்சின் சர்க்கார் திரைப்படம் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு வெளியாகும் என்பதை சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.