மென். யுனைடெட் வரும் பருவத்தில் சிறப்பாக விளையாடும் – மொரின்ஹோ நம்பிக்கை

0
14

மென்செஸ்டர், ஆக. 9 –

வெள்ளிக்கிழமை அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ள 2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரிமீயர் லீக் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக விளையாடும் என நிர்வாகி ஜோசே மொரின்ஹோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போர்ச்சுக்கலை சேர்ந்த ஜோசே மொரின்ஹோ கடந்த 2016 ஆம் ஆண்டில் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டார்.

இவரின் நிர்வாகத்தின் கீழ் மென்செஸ்டர் யுனைடெட் அணி, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. எனினும் இங்கிலாந்து லீக் கிண்ணம் , யூரோப்பா லீக் கிண்ணங்களை வென்றது.

இந்த முறை மென்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று மொரின்ஹோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மொரின்ஹோ கூறுகையில் ‘‘எங்களால் வெற்றி பெற முடியுமா? என்றால் எங்களால் முடியும். எங்கள் அணி சிறந்ததாகவும், வலுவானதாகவும் இருக்கிறது. ஆனால், மற்ற கிளப்புகளும் அதிக வலுவாக உள்ளது. ஆகவே, வரும் பருவம் மிகவும் கடினமாக இருக்கும்.

பொதுவாகவே, ஒரு அணிக்கு நிர்வாகியாக சென்றபின் முதல் பருவத்தை விட இரண்டாவது பருவம் சிறந்ததாக இருக்கும். ஏனென்றால், கிளப்பைப் பற்றி தெரிந்திருக்கும். வீரர்களை பற்றி தெரிந்திருக்கும். வீரர்களுக்கும் என்னைப் பற்றி தெரிந்திருக்கும்’’ என்றார்.

54 வயதாகும் மொரின்ஹோ போர்ச்சுகலின் பென்பிகா, எப்.சி போர்ட்டோ, இங்கிலாந்தின் செல்சி, ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.