கோலாலம்பூர், ஆக. 9-

29ஆவது சீ விளையாட்டு போட்டியில் நாட்டை பிரதிநிதிக்கக்கூடிய விளையாட்டாளர்கள் தேர்வில் தாம் ஒரு போதும் தலையிட போவதில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

சரியான முறையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டாளர்கள் தேர்வு அல்லது நிராகரிப்பு விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என அவர் கூறினார். இறுதி நேரத்தில் ஒரு வீராங்கனையின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து வினவப்பட்ட போது கைரி மேற்கண்டவாறு சொன்னார்.

சம்பந்தப்பட்ட வீராங்கனையின் பெயரை தடகள விளையாட்டு நிர்வாகம் நீக்கியது. இது குறித்து தேசிய விளையாட்டு மன்றம் (எம்.எஸ்.என்), மலேசிய ஒலிம்பிக் மன்றம் (எம்.ஓ.எம்) ஆகியவற்றிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான முறையில் எடுக்கப்பட்ட முடிவு இதுவாகும். விளையாட்டு தொடர்பான கொள்கைகளை மட்டுமே தம்மால் வகுக்க முடியும் என கூறிய அவர், விளையாட்டு சங்கங்கள் எடுக்கும் முடிவில் தலையிட தமக்கு அதிகாரம் இல்லை என அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட வீராங்கனையின் பெயர் சரியான காரணங்கள் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது குறித்து எனக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் நீக்கத்தால் சீ விளையாட்டு போட்டியில் தடகள பிரிவில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என கைரி குறிப்பிட்டார்.

மகளிர் தடகள வீராங்கனையான எஸ்.கோமளம் ஷெல்லியின் பெயர் மகளிருக்கான 4X100மீட்டர் பிரிவிலிருந்து நீக்கப்பட்டதாக வலைதளம் ஒன்று அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.