கோலாலம்பூர், ஆக.9

தோட்ட மற்றும் மூல தொழில்துறை அமைச்சின் புதிய தலைமைச் செயலாளராக டத்தோ யோகேஸ்வரன் குமரகுரு  நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு முன்னாள் துணைத் தலைமை இயக்குநரான யோகேஸ்வரனின் புதிய பதவி காலம் இன்று முதல் நடப்புக்கு வருவதாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா தெரிவித்தார். கடந்த ஜூன் 24 ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற டத்தோ எம்.நாகராஜனுக்குப் பதிலாக யோகேஸ்வரன் இப்பதவிக்கு நியமிக்கப்படுவதாக  அலி ஹம்சா குறிப்பிட்டார்.

பொருளாதார ஆய்வியல் துறை, நிதி நிர்வாகம் போன்றவற்றில் பரந்த அனுபவத்தைக்  கொண்ட யோகேஸ்வரன் 36 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச் சேவைத் துறையில் சேவையாற்றி வருவதாக அறியப்படுகிறது.

1981 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி   பொதுச் சேவைத் துறை நிர்வாக பிரிவில் பணியாற்றத் தொடங்கிய யோகேஸ்வரன் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவில் புறநகர் பொருளாதார ஆய்வியல் பிரிவு துணைத் தலைமை இயக்குநர், தொழில்துறை சேவைப் பிரிவின் இயக்குநர் மற்றும் தேசிய உருமாற்றுத் திட்டத்தின் துணை தலைமை இயக்குநர் போன்ற பதவிகளை வகித்திருப்பதாக அறிக்கை ஒன்றின் வழி அலி ஹம்சா விவரித்தார்.