ஸ்ரீ கெம்பாங்கான், செப். 16-
15ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக ஐபிஎப்பை இணைத்துக் கொள்ள தவறினால் தேர்தலில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உட்பட சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தன் சூளுரைத்தார்.
தேசிய முன்னணி 62 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சியாக இருக்கின்றது. ஆனால் ஐபிஎப்பை பொறுத்தவரை 1990ஆம் ஆண்டே எதிர்க்கட்சியாகத்தான் நாங்கள் செயல்பட்டோம். அத்தேர்தலில் முக்கிய நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி கண்டோம்.
குறிப்பாக போட்டியிட்ட தொகுதிகளில் வைப்புத் தொகையை நாங்கள் இழக்கவில்லை. இதுவே ஐபிஎப் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதன் பின்னர் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரங்களில் ஈடுபட்ட வந்த இக்கட்சி எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக இணைய வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் அது இன்று வரை ஈடேறவில்லை. இனியும், நாங்கள் அமைதிக் காக்க போவதில்லை.
தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக இணைத்துக் கொள்ளாவிட்டால் 15ஆவது பொதுத்தேர்தலில் இக்கட்சி தனித்து போட்டியிடும் என டத்தோ சம்பந்தன் கூறினார். 5 நாடாளுமன்றத் தொகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

இதில் அம்னோவின் தொகுதிகளும் உண்டு. குறிப்பாக, உலு லங்காட் தொகுதியில் போட்டியிட அனைத்து நிலைகளிலும் ஐபிஎப் தயாராகி விட்டது. குறிப்பாக, ஐபிஎப் உறுப்பினர்களை உலு லங்காட் தொகுதியின் வாக்காளர்களாக பதிவும் நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுப்போம் என அவர் கூறினார்.
அதே போல் உலுசிலாங்கூர், காப்பார், ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளும் ஐபிஎப் அடையாளம் கண்டுள்ளது. இத்தொகுதிகளில் ஐபிஎப் இந்தியர்களின் ஆதரவை முழுமையாக கொண்டுள்ளது. அதோடு, மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் ஐபிஎப் இதுநாள் வரை திறன்பட செயல்பட்டு வந்துள்ளது என்பதையும் டத்தோ சம்பந்தன் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, இந்த 5 நாடாளுமன்றத் தொகுதிகளை தவிர்த்து ஈஜோக் உட்பட சில சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட ஐபிஎப் தயாராகிவிட்டது. இனியும், தோழமைக் கட்சியாக தொடர்ந்து நீடிக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களை தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டில் போட்டியிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டத்தோ சம்பந்தன் திட்டவட்டமாக கூறினார்.
ஐபிஎப்பின் 26ஆவது பொதுப் பேரவை ஸ்ரீ கெம்பாங்கான் விஸ்மா ஐபிஎப்பில் நடந்தது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த 700 பேராளர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.தனேந்திரன், கிம்மா கட்சியை பிரதிநிதித்து அதன் செயலாளர் உசேன் ஜமால், தொழிலதிபர் டத்தோஸ்ரீ வனத்திய அந்தோணி, ஐபிஎப் கட்சியின் மாதர் பகுதித் தலைவர் ராஜம்மா, கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஜோய் ஹெரிக்சன் என பலர் கலந்து கொண்டனர்.

