புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > வெற்றியுடன் பயணத்தைத் தொடங்கிய மென்செஸ்டர் யுனைடெட் !
விளையாட்டு

வெற்றியுடன் பயணத்தைத் தொடங்கிய மென்செஸ்டர் யுனைடெட் !

சூரிக், செப்.20-

2018/19 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியை மென்செஸ்டர் யுனைடெட் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எச் பிரிவு ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்  3- 0 என்ற கோல்களில் சுவிட்சர்லாந்து லீக் வெற்றியாளரான யாங் பாய்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்டின் முன்னணி நட்சத்திரம் போல் பொக்பா இரண்டு கோல்களைப் போட்டு அதிரடி படைத்துள்ளார். 35 ஆவது நிமிடத்தில் லாவகமாக இரண்டு ஆட்டக்காரர்களை ஏமாற்றி பொக்பா முதல் கோலைப் போட்டார். முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் பினால்டியின் மூலம் பொக்பா இரண்டாவது கோலை அடித்தார்.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடிய மென்செஸ்டர் யுனைடெட், 66 ஆவது நிமிடத்தில் அந்தோனி மார்சியல் மூலம் தனது மூன்றாவது கோலைப் போட்டது. மார்சியல் கோல் போடுவதற்கும் பொக்பா துணைப் புரிந்துள்ளார். கடந்த பருவத்தில் சம்பியன்ஸ் லீக் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறிய மென்செஸ்டர் யுனைடெட்டுக்கு, இந்த பருவத்தில் கிடைத்திருக்கும் வெற்றி புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

யாங் பாய்ஸ் அணிக்கு எதிராக பொக்பாவின் ஆட்டத்தில் தாம் மன நிறைவு கொள்வதாக நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார். எச் பிரிவில் அடுத்த இரண்டு ஆட்டங்களில் பலம் வாய்ந்த வலென்சியா, யுவன்டஸ் அணிகளை வீழ்த்துவதில் மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன