வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தல் : 29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 13இல் வாக்களிப்பு
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தல் : 29ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 13இல் வாக்களிப்பு

புத்ரா ஜெயா, செப்.20-

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 29ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில் அத்தொகுதிக்கான வாக்களிப்பு அக்டோபர் 13ஆம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ ஒத்மான் மாமுட் அறிவித்தார். இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரத்திற்கு 14 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கு 36 லட்சம் வெள்ளி செலவாகும் என்றும் ஒத்மான் தெரிவித்தார். போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி 5 சட்டமன்றங்களைக் கொண்ட பெரிய தொகுதியாகும். இது ஒரு மதிப்பீட்டுத் தொகை தான். எனினும் இந்த இடைத்தேர்தலுக்கான செலவு 36 லட்சம் வெள்ளியை தாண்டாது எனவும் அவர் சொன்னார். வாடகை, அலவன்ஸ் மற்றும் சாதனங்களை கொள்முதல் செய்வதற்கும் பணம் செலவாகும் என்றும் அவர் சொன்னார்.

மொத்தம் 39 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பு நடைபெறும். 1400 ஊழியர்கள் தன்னார்வலர்களும் இந்த இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுவர். 75,770 தகுதி பெற்ற வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் வாக்களிப்பர். இவர்களில் 68,486 வழக்கமான வாக்காளர்கள் ஆவர். முன்கூட்டியே வாக்களிக்கும் தகுதியை 7,268 வாக்காளர்கள் பெற்றுள்ளனர். வெளிநாடுகளைச் சேர்ந்த 16 வாக்காளர்களும் அடங்குவர்.

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவதற்கு வழி விடும் வகையில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டேனியல் பாலகோபால் அப்துல்லா அந்த தொகுதியிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழி விடும் பொருட்டு இந்த முடிவை செய்ததாக டேனியல் கூறியிருந்தார்.

இதற்கு முன் போர்ட்டிக்சன் தொகுதியில் மஇகா வேட்பாளர்கள் போட்டியிட்டு வந்தனர். இம்முறை இந்த இடைத்தேர்தலில் மஇகா போட்டியிடாது என அறிவித்து விட்டது. பாஸ்கட்சியும் போட்டியிடவில்லை என்று கூறியுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து செப்டம்பர் 24ஆம் தேதி அம்னோ முடிவு செய்யும். இந்த தொகுதியில் 55 விழுக்காட்டினர் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர் ஆவர். 33 விழுக்காட்டினர் சீன வாக்காளர்களாகவும், இந்தியர்கள் 22 விழுக்காட்டையும் கொண்டுள்ளனர். மலாய்க்காரர் வாக்காளர்கள் 43 விழுக்காட்டினர் ஆவர்.

கடந்த பொது தேர்தலில் மஇகாவின், வி.எஸ். மோகன் மற்றும் பாஸ் கட்சியின் மாபுஸ் ரோஸ்லானை 17,710 பெரும்பான்மை வாக்குகளில் டேனியல் வெற்றி பெற்றார். அவருக்கு மொத்தம் 36, 225 வாக்குகள் கிடைத்தன. வி.எஸ்.மோகனுக்கு 18,515 மற்றும் மாபுஸ்சுக்கு 6,594 வாக்குகளும் கிடைத்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன