சைபர்ஜெயா, செப். 21-

ஆரோக்கிய சுவாசத்தின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மலேசியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான லிம் கோக் விங், கார்டியன் மலேசியாவுடன் இணைந்து ஆரோக்கிய சுவாசம் குறித்த பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

சைபர்ஜெயாவில் உள்ள லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தில் இதனை இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். லிம் கோக் விங் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும் நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுக்காமல், சமுதாய சேவைகளிலும் ஈடுபடுவது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

இதுபோன்ற சமுதாய கடப்பாடு கொண்ட நிகழ்ச்சிகளை இதர கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும் முன்னெடுக்க வேண்டும். இது மாணவர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துமென ஸ்டிவன் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பல்லூடக மற்றும் மின்பொருள் பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆரோக்கிய சுவாசம் குறித்த குறும்படத்தையும், நிழல்படத்தையும் உருவாக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பான படைப்புகளை வழங்கிவர்களுக்கு 14 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான கவர்ச்சிகரமான பரிசுகள் காத்திருக்கின்றன.

குறிப்பாக வாய் சுகாதாரத்தை பாதுகாக்கத் தவறினால் எம்மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து சில குறும்படங்களை லிம் கோக் விங் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியிருந்தார்கள். இதில் ஒரு நபரை பின் தொடரும் பேய், அவரது வாய் துற்நாற்றத்தால் மயங்கி விழுகின்றது. பின்னர் கார்டியனின் வாய் கொப்பளிக்கும் திரவியத்தை பேய் அந்த நபரிடம் வழங்குகின்றது. இந்த காட்சி ஒளியேறியபோது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

இதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறும்படங்கள் ஒளியேற்றப்பட்டன. அதோடு வாய் சுகாதாரத்தை முன்னிறுத்தும் வகையில் நிழல்படங்களை உருவாக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இதிலும் பல மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டினார்கள். குறிப்பாக மாணவர்களின் தனிப்பட்ட படைப்பாற்றல் அனைவரையும் கவர்ந்தது.

தேர்தெடுக்கப்பட்டவர்களின் படைப்புகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் வாக்குகள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.