புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > ரொனால்டோ, மெஸ்சியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் மொட்ரிச் !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

ரொனால்டோ, மெஸ்சியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் மொட்ரிச் !

லண்டன், செப்.25-

கடந்த 10 ஆண்டுகளாக உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கான விருதுகளை தங்களுக்கு இடையில் பகிர்ந்து கொண்ட போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் லியோனெல் மெஸ்சியின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள 2018 ஃபிபா சிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கான விருதை குரோஷியாவின் லுக்கா மொட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஆக கடைசியாக 2007 ஆம் ஆண்டில் ரொனால்டோ, மெஸ்சியைத் தவிர்த்து சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை வென்றவர் பிரேசிலின் ரொனால்டோ. அதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் ரொனால்டோவும், மெஸ்சியும்  தலா ஐந்து முறை உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காருக்கான விருதை வென்றுள்ளனர்.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கான விருது, மொட்ரிச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. குரோஷியா தேசிய கால்பந்து அணியுடன் 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் வரை தகுதிப் பெற்ற மொட்ரிச், சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற ரியல் மாட்ரிட் அணியிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார்.

இம்முறை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இறுதி மூன்று ஆட்டக்காரர்களில் லியோனெல் மெஸ்சி தேர்வாகவில்லை. இறுதி மூன்று ஆட்டக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவையும், எகிப்தின் முஹமட் சாலாவையும் பின்னுக்குத் தள்ளி, மொட்ரிச் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளார்.

இந்த விருது விழாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனெல் மெஸ்சியும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது. அந்த இரண்டு ஆட்டக்காரர்களும் இந்த விருது விழாவுக்கு வந்திருக்க வேண்டும் என தாம் விரும்பியதாக மொட்ரிச் தனது உரையில் குறிப்பிட்டார்.

எனினும் நாளை யுவன்டஸ் , பார்சிலோனா அணியில் விளையாட விருக்கும் ரொனால்டோவும் மெஸ்சியும் விருது விழாவில் பங்கேற்கவில்லை.  இதனிடையே பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்றுனர் டீடியர் டிசாம்ப், 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து நிர்வாகியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற ஃபிபா உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் இரண்டாவது முறையாக கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்த டிசாம்புக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன