திங்கட்கிழமை, ஜூன் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சூப்பர் சிங்கர் பாடகர் தேர்வு! 452 பேர் திரண்டனர்!
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

சூப்பர் சிங்கர் பாடகர் தேர்வு! 452 பேர் திரண்டனர்!

கோலாலம்பூர், செப். 25-

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உலகளாவிய நிலையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். அண்மையில் சூப்பர் சிங்கர் 6 வெற்றிகரமாக முடிவடைந்தது. இதன் வெற்றியாளராக நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் 6 ஜூனியர் போட்டிக்கான பாடகர் தேர்வு நடந்து வருகின்றது. இதுவரையில் இந்தியாவிலிருந்து மட்டுமே இப்போட்டியில் பாடகர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் கடந்த ஜூனியர் போட்டியில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சிறுமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இறுதிச் சுற்றுவரை முன்னேறியதோடு, இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றார்.

சூப்பர் சிங்கர் போட்டியில் அவ்வப்போது புதிய சவாலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் நாட்டுப்புறக் கலைஞரான செந்தில் கணேஷ் கலந்து கொண்டார். இம்முறை ஜூனியர் போட்டிக்கான பாடகர் தேர்வு மலேசியாவிலும் நடந்தது.

இந்த நேர்முகத் தேர்வை மலேசியாவின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றான ஹென்ரிகோஸ் ஏற்று நடத்தியது. தலைநகர் இஸ்தானா தங்கும் விடுதியில் நடந்த இந்த தேர்வில் 452 சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களின் பாடும் திறனை வெளிப்படுத்தினார்கள் என அதன் தலைமை செயல்முறை அதிகாரி எஸ்.கே. சுந்தரம் கூறினார்.

மலேசியாவிலும் கலைத் துறையில் சாதிக்க வேண்டுமென பலர் காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டுமென்ற நோக்கத்திற்காக இந்த நேர்முகத் தேர்வை நடத்த ஹென்ரிகோஸ் முன்வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மக்கள் மகத்தான ஆதரவை வழங்கினார்கள். குறிப்பாக சிறுவர்களும் பாடல்களை சிறப்பாகப் பாடி நடுவர்களின் பாராட்டையும் பெற்றார்கள். இதிலிருந்து சிறந்தவர்கள் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் எஸ்.கே. சுந்தரம்  குறிப்பிட்டார்.

வரும் காலங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தமது நிறுவனம் முன்னுரிமை வழங்கும் என்ற அவர் இந்த நேர்முகத் தேர்வு சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 பாடகர்கள் தேர்வில் நடுவர்களாக சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீகாந்த், நிவாஸ், சினிவாஸ் ஆகியோர் இருந்தனர். பாடகர்களுடன் அன்பாகப் பேசி இவர்கள் நிழல் படமும் எடுத்துக் கொண்டார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன