பகாங் கராத்தே சங்கத்திற்கு எதிராக சதி! கெவின் ரமேஷ் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், செப். 25-

மலேசிய கராத்தே சங்கம் (மக்கோப்) பகாங் கராத்தே சங்கத்தின் உரிமையை தட்டி பறிக்கின்றது. குறிப்பாக வரும் தேசிய சங்க தேர்தலில் வாக்களிக்கவும் போட்டியிடவும் பகாங் கராத்தே சங்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அதன் தலைவர் கெவின் ரமேஷ் குற்றம் சாட்டினார். 2017ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி மலேசிய கராத்தே சங்கத்திலிருந்து பகாங் கராத்தே சங்கத்தை (கராப்பா) தற்காலிகமாக இடைநீக்கம் செய்வதாக மக்கோப் அறிவித்தது.

ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இந்த இடைநீக்கம் இன்னமும் தொடர்கின்றது. எதற்காக ஏன் நீக்கம் செய்தார்கள் என்ற நியாயமான காரணத்தையும் இதுநாள் வரை அவர்கள் முன் வைக்கவில்லை. அடுத்த மாதம் மக்கோப்பின் உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல் நடக்கின்றது. அதில் பகாங் கராத்தே சங்கம் பங்கெடுக்கக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

முன்னதாக 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் மக்காப்பின் தலைமைச் செயலாளரான வின்சன் சின் ஆலோசனையில் பகாங் கராத்தே சங்கம் செயல்பட்டது. இந்த 8 ஆண்டுகளில் சங்கத்தில் எந்த மேம்பாடும் காணப்படவில்லை. குறிப்பாக, புதிய விளையாட்டாளர்களை உருவாக்குவது தேசிய நிலையிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்வது, விளையாட்டாளர்களுக்கான பயிற்சிகளை வழங்குவது என எந்த நடவடிக்கையும் வின்சன் சின் முன்னெடுக்கவில்லை.

இதனிடையே, 2016ஆம் ஆண்டு பகாங் கராத்தே சங்கத்தின் கீழ் ஹாயாஷி கராத்தே சங்கமும் பெந்தோங் மாவட்ட கராத்தே சங்கமும் பகாங் கராத்தே சங்கத்தின் கீழ் இணைய இணக்கம் காணப்பட்டது. அவர்களின் பங்களிப்பின் அடிப்படையில் பகாங் மாநிலம் கராத்தேவில் மேம்பாடு காணத் தொடங்கியது.

இச்சமயம் இந்த 2 சங்கங்களையும் இணைத்துக் கொண்டது சரியல்ல என வின்சன் சின் கூறினார். அப்போது மாநில கராத்தே சங்கத்தை நாங்களே கவனித்துக் கொள்கிறோம் என கூறி விட்டு எங்கள் நடவடிக்கையை தொடங்கினோம். அப்போதுதான் பிரச்னை ஆரம்பித்தது. இந்த விவகாரம் குறித்து மலேசிய கராத்தே சங்கம் கேள்வி எழுப்பிய போது அதற்கான விளக்கத்தையும் வழங்கினோம். அதோடு, வின்சன் சின் மாநில விவகாரங்களில் அதிகம் தலையீடுவது குறித்தும் மக்கோப்பிற்கு கடிதம் எழுதினோம். இந்த 2 விவகாரங்களையும் முதன்மையாக சுட்டிக் காட்டி மக்கோப்பிலிருந்து பகாங் கராத்தே சங்கம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக கடிதம் வழங்கப்பட்டது என கெவின் ரமேஷ் கூறினார்.

மக்கோப்பிலிருந்து எங்களை நீக்குவதற்கு முன்னதாக எங்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது காரணம் கூறும் கடிதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த 2 நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் மக்கோப் தலைமைத்துவம் பகாங் கராத்தே சங்கத்தை தற்காலிகமாக நீக்கியது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார். எங்கள் மீதான விசாரணை நியாயம்தானா என்பது குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டது. அவர்களும் பகாங் கராத்தே சங்கத்தின் மீது தவறு இல்லை என கூறி விட்டார்கள். ஆனால், தற்காலிக நீக்கம் இன்னமும் தொடர்கிறது என கெவின் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, செப்டம்பர் 21ஆம் தேதி மலாக்காவில் மக்கோப்பின் உச்சமன்றக் கூட்டம் நடந்தது. அப்போது அதன் உறுப்பினர்கள் பகாங் கராத்தே சங்கத்திற்கு எதிராக இடைக்கால தடை விதித்தது தவறு என கருத்துரைத்தனர். இந்த விவகாரம் தொடர்பில் தலைமைத்துவம் தான் முடிவெடுக்கும் என கூறிவிட்டார்கள். இது உச்சமன்றத்தையே அவமதிக்கும் நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார். மக்கோப்பில் மீண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். குறிப்பாக வரும் சங்கத் தேர்தலில் நாங்கள் பங்கேற்க வேண்டும். எங்களை இதில் இடம் பெறச் செய்யக்கூடாது என்பதற்காக பலதரப்பட்ட நடவடிக்கைகள் முடக்கிவிடப்படுவதையும் எங்களால் அறிய முடிகிறது.

இந்த விவகாரத்திற்கு உடனடி தீர்வு அவசியம். அந்த அடிப்படையில் இந்த விவகாரத்தை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். உண்மை நிலையை கண்டறிந்து பகாங் கராத்தே சங்கத்திற்கு நியாயமான பதிலை வழங்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை தலைநகர் ரெனாய்ஸன் தங்கும் விடுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கெவின் ரமேஷ் வலியுறுத்தினார்.