முகப்பு > சமூகம் > வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவோம்
சமூகம்முதன்மைச் செய்திகள்

வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவோம்

கோலாலம்பூர், ஆக 10-

சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடயே கட்டொழுங்கு, பகடிவதை மற்றும் வன்செயல் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றது. இத்தகைய செயல்களிலிருந்து மாணவர்களை வெளிக் கொண்டு வருவதும் வன்செயலற்ற சமூகத்தை உருவாக்குவதும் நமது கடமை என போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ நோர் ரஷிட் பின் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மற்ற பிரச்னைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பகடிவதை சம்பவங்கள்தான் தலைதூக்கி நிற்கின்றது. அந்த வரிசையில், பினாங்கில் நவீனுக்கு நிகழ்ந்த பகடிவதை சம்பவத்தை முன் உதாரணமாகக் கூறலாம். இதுபோன்ற பிரச்னைகளை மெத்தனப்போக்காக எடுத்துக் கொள்ளாமல் இனி வரும் காலங்களில் அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம், அரசு சார்பற்ற இயக்கங்கள், பெற்றோர்கள்  பள்ளி ஆசிரியர்கள், ஆகியோர் அக்கறை காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அரச மலேசிய போலீஸ் படை மற்றும் கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு தேசிய புகார் மையம் ஏற்பாட்டில் இன்று தலைநகரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் (புலாபோல்) நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கை நோர் ரஷிட் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். காலை 9.00 மணியளவில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் 102 இடைநிலைப்பள்ளி மாணவர்களும், 15 தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய மாணவர்கள், சமுதாயத்தில் கட்டொழுங்குமிக்கவர்களாகவும் பண்புடையவர்களாகவும் திகழ வேண்டும். எதிர்வரும் 2050ஆம் ஆண்டில் மாணவர்களும் இளைஞர்களும் சமுதாயத்திற்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று தேசிய புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திரகுமணன் விளக்கமளித்தார். அரசாங்கம், அரசு சார்பற்ற இயக்கங்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு நாங்கள் இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு ஆதரவு வழங்கிவரும் அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

இதனிடையே, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை துணை இயக்குநர் டத்தோ தெய்வீகன் கூறுகையில், போலீஸ் படை பகடிவதை சம்பவங்கள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் நிகழ்ந்த 10,000 பகடிவதை சம்பவங்களில் 8,000 சம்பவங்கள் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் 2,000 பகடிவதை சம்பவங்களில் பெண்கள் ஈடுபட்டுள்ளதாகக் கிடைத்த தகவல், வேதனையை அளிக்கிறது என அவர் வருத்தம் தெரிவித்தார். ஆண்கள் வன்செயல்களில் ஈடுபட்ட காலம் சென்று பெண்களும் அதில் ஈடுபடுவது அதிர்ச்சியை அளிக்கின்றது. எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் இது போன்ற செயல்கள் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறப்பு. அதற்கு போலீஸ் படையும் தனது ஆதரவை வழங்கும் என அவர் சொன்னார். இந்நிகழ்வில் கல்வி துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் காயிர் பின் முகமட் யூசோப், குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ தஜூடின் பின் இசா உட்பட மேலும் பலர் பிரமுகர்கள் கலந்து கொண்டர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன